இந்தியா கட்டுரைகள்

சவால்களை சமாளிப்பாரா பசவராஜ் பொம்மை


தேவேந்திரன் பழனிசாமி

கட்டுரையாளர்

கர்நாடகாவில் யார் முதலமைச்சர் ஆகப்போகிறார் என்ற குழப்பம் வந்த அடுத்த நொடியே யார் யார் எல்லாம் துணை முதலமைச்சர்கள், அமைச்சர்கள் ஆவார்கள் என்ற குழப்பம் துவங்கிவிட்டது.

கர்நாடக முதலமைச்சராக பசவராஜ் பொம்மை நேற்று பதவியேற்றுக் கொண்ட நிலையில், துணை முதலமைச்சர் பதவிக்கு மிகப் பெரிய போட்டி நடக்கத் தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த உட்கட்சி பூசல் புதிய முதலமைச்சருக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. பசவராஜ் பொம்மை பதவியேற்ற முதல் நாளிலேயே துணை முதலமைச்சர் பதவிக்கு சிலர் போர்க்கொடி உயர்த்த தொடங்கியுள்ளனர்.

பாஜகவில் பசவராஜ் பொம்மையை விடவும் பல சீனியர் அமைச்சர்கள் இருக்கின்றனர். பாஜகவை கர்நாடகத்தில் காலூன்ற வைத்த மூத்த தலைவர்களும் இருக்கின்றனர். அப்படியிருக்க பசவராஜ் பொம்மை முதலமைச்சராக்கப்பட்டதில் பலருக்கும் வருத்தம் இருக்கிறது. ஆனாலும் பாஜகவின் தேசிய தலைமை வலுவான சமிஞை காட்டிவிட்டதால் அனைவரும் முதலமைச்சர் விவகாரம் குறித்து அமைதி காப்பதாக சொல்லப்படுகிறது.

எடியூரப்பாவின் லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்தவர் தான் பசவராஜ் பொம்மையும். இதனால், கர்நாடகாவில் பாஜக ஒரு ஜாதியின் கட்சியாக மாறிவருகிறது என்ற விமர்சனங்களும் எழுந்து வருகிறது. இதை முறியடிப்பதற்காக, ஒக்கலிகர் சமுதாயத்தைச் சேர்ந்த அசோகா, துணை முதலமைச்சராக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. அதேபோல் தலித் சமூகத்தைச் சேர்ந்த கோவிந்த கார்ஜோள் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த ஸ்ரீராமுலு ஆகியோரும் துணை முதலமைச்சர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம் பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரும், முன்னாள் துணை முதலமைச்சருமான ஈஸ்வரப்பா தனக்கு இப்போது துணை முதலமைச்சர் பதவி தரப்பட வேண்டும் என்று காய் நகர்த்தி வருவதாகவும் தெரிகிறது. அவரைபோலவே மூத்த தலைவர்களும், முன்னாள் அமைச்சர்களும் தங்களுக்கு, துணை முதலமைச்சர், முக்கியத் துறைகளை கொண்ட அமைச்சர் பொறுப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருப்பதாகவும், அதற்காக பல முனைகளில் இருந்து பசவராஜ் பொம்மைக்கு அழுத்தம் வருவதாகவும் கூறப்படுகிறது.

பசவராஜ் பொம்மை, எடியூரப்பாவின் ஆதரவாளர் என்றும் அவர் எடியூராப்பா சொல்வதைத் தான் செய்யப்போகிறார் என்றும் கருத்துக்கள் பரவின. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பசவராஜ் பொம்மை, தான் யாருடைய ரப்பர் ஸ்டாம்பும் இல்லை என்றும் தான் ஒரு மக்கள் ஸ்டாம்ப் என்றும் தெரிவித்திருக்கிறார்.

ஒருபுறம் கர்நாடக பாஜகவிற்குள் நீடிக்கும் குழப்பம் மறுபுறம் அண்டை மாநில பிரச்சனைகள், அதோடு, கொரோனா, வெள்ளப்பெருக்கு என்று பல்வேறு பிரச்சனைகளை பசவராஜ் பொம்மை எப்படி சமாளிக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…

 

 

Advertisement:
SHARE

Related posts

கோல்டன் விசா பெறுவதற்காக துபாய் சென்றார் மம்மூட்டி

Gayathri Venkatesan

எல்லை மோதல் விவகாரத்தில், எத்தகைய சவாலையும் இந்தியா எதிர்கொள்ள தயார்: ராஜ்நாத் சிங்

Niruban Chakkaaravarthi

நள்ளிரவில் டான்ஸ்: ’தூக்கத்தை கெடுத்த’ இளைஞர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை

Ezhilarasan