கல்லூரியில் சீட் கேட்டு மிரட்டிய போலி ஐஏஎஸ் அதிகாரி கைது

கோவையில் கல்லூரி நிர்வாகத்தை சீட் கேட்டு மிரட்டிய போலி ஐ.ஏ.எஸ். அதிகாரியை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் திருப்பூர் ராமகிருஷ்ணா நகர் 3-வது வீதியை சேர்ந்தவர் முகமது அல் அமீன்…

கோவையில் கல்லூரி நிர்வாகத்தை சீட் கேட்டு மிரட்டிய போலி ஐ.ஏ.எஸ். அதிகாரியை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

திருப்பூர் ராமகிருஷ்ணா நகர் 3-வது வீதியை சேர்ந்தவர் முகமது அல் அமீன் (53). இவர் கடந்த 2021-ம் ஆண்டு கோவையில் உள்ள ஜி.ஆர்.டி தனியார் கல்லூரியை
தொடர்பு கொண்டு அவர் தன்னை ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றும், சென்னையில்
பணியாற்றுவதாகவும் கூறி அறிமுகம் செய்து கொண்டுள்ளார்.

பின்னர், கல்லூரியில் தனக்குத் தெரிந்தவர்களுக்கு சீட் தர வேண்டும் என்று கேட்டு மிரட்டும் தொணியில் பேசியதாகக் கூறப்படுகிறது. அத்துடன் சீட் தராவிட்டால் கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சொல்லி இருக்கின்றார். இதனால் சந்தேகம் அடைந்த கல்லூரி நிர்வாகத்தினர் இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து, மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸ் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.விசாரணையில், முகமது அல் அமீன் ஐ.ஏ.எஸ். அதிகாரி இல்லை என்பதும், போலியாக தன்னை ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று கல்லூரி நிர்வாகத்தை மிரட்டி சீட் கேட்டதும் தெரியவந்தது. மேலும் இவர் மீது சென்னை வேப்பேரி போலீஸ் நிலையத்திலும், சென்னை மாநகர குற்றப்பிரிவிலும், சேலம் சூரமங்கலத்திலும் இதுபோன்று மோசடி செய்ததாக வழக்கு உள்ளதும், சென்னையில் தன்னை நீதிபதி என்று கூறி மிரட்டிய வழக்கில் கைதாகி சிறையில் இருந்து வெளியே வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, திருப்பூரில் இருந்த அவரை சைபர் கிரைம் போலீஸார் இன்று கோவை அழைத்து வந்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.