முக்கியச் செய்திகள் இந்தியா தேர்தல் 2021 செய்திகள்

’கட்சியின் முடிவை வரவேற்கிறேன்’: சர்ச்சைக்கு சைலஜா டீச்சர் முற்றுப்புள்ளி!

அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதால், கட்சி நல்ல முடிவை எடுத்துள்ளது என்று கேரள மாநில முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா டீச்சர் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கூட்டணி அமோக வெற்றிபெற்றது. மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 99 தொகுதிகளை இந்த கூட்டணி கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. பினராயி விஜயன் மீண்டும் முதல்வராகிறார்.

இந்நிலையில் அவர் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பது குறித்து, கூட்டணி கட்சிகள் நேற்று ஆலோசனை நடத்தியது. இதில், 21 அமைச்சர்களுடன் பினராயி விஜயன் 20 ஆம் தேதி பதவியேற்பதாக அறிவிக்கப்பட்டது.

அமைச்சர்கள் புதுமுகமாக இருப்பார்கள் என்றும் கூறப்பட்டது. கடந்த ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த கே.கே. சைலஜா டீச்சர், நிபா வைரஸ், கொரோனா தொற்று காலத்தில் சிறப்பாக செயல்பட்டதால் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மக்களிடம் அதிக செல்வாக்கு மிக்கவரான அவருக்கு இந்த முறை அமைச்சர் வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் சர்ச்சையானது. அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று பலர் கூறி வந்தனர்.

இந்நிலையில், கே.கே.சைலஜா டீச்சர், புதுமுகங்களுக்கு வாய்ப்பு என்கிற கட்சியின் முடிவை வரவேற்றுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, கட்சித் தலைமை கடந்த முறை என்னை அமைச்சராக நியமித்தது. என் கடமையை சரியாக செய்தேன். அது எனக்கு சிறந்த அனுபவமாக இருந்தது. என்னைப் போலவே கட்சியில் அனைவரும் நன்றாக உழைத்தனர். அதற்காக நானே தொடர வேண்டும் என்பதில்லை. சிறப்பாக பணியாற்றக் கூடிய பலர் இருக்கிறார்கள். அவர்களும் கடினமாக உழைக்கக் கூடியவர்கள். அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதால் கட்சி நல்ல முடிவை எடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Advertisement:

Related posts

சொன்னதை செய்யும் ஆட்சி அதிமுக ஆட்சி : ஜான்பாண்டியன்!

Ezhilarasan

சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த சிறப்புக் குழுக்கள் அமைப்பு!

Gayathri Venkatesan

புதிய பாடப்புத்தக விநியோகம் குறித்து அதிகாரிகள் ஆலோசனை!

Ezhilarasan