நெல்லை மாவட்டம் முக்கூடலில் உள்ள மத்திய பீடித் தொழிலாளர்கள் மருத்துவமனை, 175 படுக்கைகள் கொண்ட கொரோனா பராமரிப்பு மையமாக மாற்றப்பட்டுள்ளது. இதை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.
நெல்லை மாவட்டம் முக்கூடலில் மத்திய அரசு சார்பில் கட்டப்பட்ட பீடித்தொழிலாளர்கள் நல மருத்துவனை உள்ளது. இதில் ஒரு பகுதி மட்டுமே செயல்பட்டு வந்த நிலையில் மற்றப்பகுதிகள் பயன்படுத்தப்படாமல் பராமரிப்பின்றி கிடந்தது. தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்த மருத்துவமனை, 175 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மற்றும் பராமரிப்பு மையமாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த சிகிச்சை மையத்தை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்து, மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள வசதிகள் , சிகிச்சைக்காக வைக்கப்பட்டுள்ள உபகரணங்கள் ஆகியவற்றை பார்வையிட்டார். மேலும் நடுகல்லுரில் நடைபெற்ற முகாமையும் பார்வையிட்டார்.
முன்னதாக அவர் அளித்த பேட்டியில், பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த மத்திய பீடித்தொழிலார்கள் நல மருத்துவமனை, கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு ஆக்சிஜன் செறிவூட்டல் கருவி மூலம் ஆக்சிஜன் வசதியும் செய்யப்பட்டுள்ளது. மருத்துகளும் தேவையான அளவு கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கூடங்குளம், முனைஞ்சிபட்டி, திசையன்விளை, பணகுடி பகுதிகளிலும் கொரோனா சிகிச்சை பராமரிப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார் .
இந்த நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் , தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவபத்மநாபன், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு , சார் ஆட்சியர் பிரதிக்தயாள், மற்றும் மருத்துவர்கள், சுகாதாரத் துறையினர்கள் கலந்து கொண்டனர் .







