EWS 10% இடஒதுக்கீடு: தமிழக அரசுடன் பாமக இணைந்து செயல்படும் – வழக்கறிஞர் பாலு

தமிழக அரசுடன் பாமக இணைந்து செயல்படும் என EWS 10 சதவிகித இட ஒதுக்கீட்டை நிராகரிப்பதாக அனைத்து கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் பாமக வழக்கறிஞர் பாலு தெரிவித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்…

தமிழக அரசுடன் பாமக இணைந்து செயல்படும் என EWS 10 சதவிகித இட ஒதுக்கீட்டை நிராகரிப்பதாக அனைத்து கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் பாமக வழக்கறிஞர் பாலு தெரிவித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று தலைமைச் செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது. பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு பின் பாமக வழக்கறிஞர் பாலு செய்தியாலர்களை சந்தித்து பேசுகையில், பாமக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரனுடன் நானும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டோம். அனைவரும் இந்த தீர்ப்பு, சமூக நீதி கோட்பாட்டிற்கு எதிரானது என்று தெரிவித்தார்கள். மண்டல் வழக்கில் 9 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார்கள். 50% தாண்டக்கூடாது என்ற நிபந்தனை உறுதி செய்யப்பட்டது. தற்போது அதைவிட குறைவான நீதிபதிகள் 50 சதவீதத்தை தாண்டலாம் என்பது போன்ற தீர்ப்பு அளிக்கப்பட்டு இருப்பது நீதித்துறை மேல் கேள்வி எழுகிறது என்றார்.

மேலும், இந்த பத்து விழுக்காடு பொருளாதார இட ஒதுக்கீடு பிரச்சினை பொறுத்தவரை இது நீதிமன்றத்தின் பார்வையை சந்தேகப்படும் வகையில் இருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் எங்கள் கருத்தை நாங்கள் முன் வைத்திருக்கிறோம் மூன்றாவது இட ஒதுக்கீடு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் சமூக நீதிக்காக குரல் கொடுக்க வேண்டும். இதற்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும் என கூறினார்.

இதற்குப் பிறகு சட்ட ரீதியாக எப்படி எதிர்கொள்வது என்ற கேள்வி வரும்போது மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்பது மட்டும்தான் ஒரே வாய்ப்பு. உச்ச நீதிமன்றத்தை பொறுத்தவரை மறுசீராய்வு மனுவை எப்படி கையாளுவார்கள் என்றால் ,  சீராய்வு மனு அனைத்துமே நீதிபதிகள் அறையிலேயே ஆலோசிக்கப்படும். நீதிமன்றத்திற்கு செல்லாமலே நிராகரிக்கப்படும் நிலை கூட ஏற்படலாம் என பாலு  குறிப்பிட்டார்.

மேலும், மாநில அரசு அதே சமயத்தில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்தால் அதற்கு முக்கியத்துவம் இருக்கும் என்பதால் தமிழக அரசு மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்தோம். அதற்கு வாய்ப்பு இருந்தால் மறு சீராய்வு மனுவை தமிழக அரசு தாக்கல் செய்யும் என்ற உத்தரவாததை முதலமைச்சர் இந்த கூட்டத்தில் வழங்கி இருக்கிறார் என்றும் பாமக சார்பில் கூட்டத்தில் பங்கேற்ற வழக்கறிஞர் பாலு தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.