முக்கியச் செய்திகள் தமிழகம்

10.5% உள்இடஒதுக்கீடு அரசாணை ரத்து; வழக்கறிஞர் பாலு வேதனை

கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இடஒதுக்கீட்டில், 10.5% உள் ஒதுக்கீடு வழங்கி, கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாடு சட்டப் பேரவையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, சுவாமிநாதன் உள்பட 25-க்கும் மேற்பட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளி சங்கர் ஆகியோர் அடங்கிய அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழ்நாடு அரசின் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. 10.5% வன்னியர்களுக்கு ஒதுக்கியதற்கான அளவுகோல்கள் விளக்கப்படவில்லை என்று கூறிய நீதிபதிகள், உள் ஒதுக்கீடு வழங்க அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா? என்றும் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியுமா? என்றும் கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை என்பதால் அந்தச் சட்டத்தை ரத்து செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மாணவர் சேர்க்கை இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நடந்து கொண்டிருப்பதால் தற்காலிக மாக தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டுமென்ற கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.

வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசுகையில், 10.5% உள்இடஒதுக்கீடு அரசாணை ரத்து செய்யப்பட்டது மிகுந்த ஏமாற்றம் தருவதாகவும் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும், 21 பேர் உயிர் தியாகத்தில் பெறப்பட்ட 20% இடஒதுக்கீட்டில் கடந்த 30 ஆண்டுகளாக பயனடைந்த சமூகங்கள் இந்த உள்ஒதுக்கீடு அரசாணையை எதிர்த்து வழக்கு நடத்தி இதனை ரத்து செய்ய வைத்திருப்பது பெரும் வேதனையளிப்பதாகவும், உள்ஒதுக்கீட்டின் அடிப்படையில் கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். உள்ஒதுக்கீ்ட்டை அமல்படுத்த பல்வேறு முயற்சிகளை திமுக அரசு மேற்கொண்டிருந்தது. ஆனாலும், தீவிரமாக இந்த வழக்கை நடத்தியிருக்கலாம் என வழக்கறிஞர் பாலு தெரிவித்தார்.

தொடர்ந்து அரசு தரப்பு வழக்கறிஞர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசுகையில் 10.5% உள்ஒதுக்கீடு அரசாணை ரத்தை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்யும் என்றார். 1985 வரையிலான சாதிய ரீதியிலான கணக்கெடுப்புகள் மட்டுமே தற்போது கைவசம் உள்ளது. புதிய கணக்கெடுப்புகளை ஒன்றிய அரசுதான் மேற்கொள்ள வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் 10.5% இடஒதுக்கீட்டின் அடிப்படையில் சேர்க்கை நடந்துள்ளது. எனவேதான் மேல்முறையீடு செய்வோம் என்று கூறுகிறோம் என அவர் செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும்: தமிழக அரசு எச்சரிக்கை!

வனவிலங்கு குற்றவியல் நிலுவை வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கக்கோரிய வழக்கு; பிப். தள்ளி வைப்பு!

Niruban Chakkaaravarthi

20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை; மாவட்ட நிர்வாகம் உத்தரவு

Halley karthi