பிரதமர் மோடி தமிழ்நாட்டின் மீது தனி கவனம் செலுத்துகிறார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75வது ஆண்டுவிழா நடைபெற்றது. அதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “நம் நாடு வளர்ச்சிப் பாதையை நோக்கி முன்னேறிக்கொண்டு இருக்கிறது. 2025 ஆம் ஆண்டில் 5 டிரில்லியன் டாலர் அளவுக்கு இந்தியாவின் வளர்ச்சி இருக்கும். கடந்த 8 ஆண்டுகளில் வளர்ச்சிப் பாதையில் 11 வது இடத்திலிருந்து 5 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சமீபத்தில் கிடைத்த ஆய்வறிக்கை படி 2027 ஆம் ஆண்டில் மூன்றாவது இடத்தில் இருக்கும்” என்று பெருமிதம் தெரிவித்தார்.
60 கோடி மக்களுக்கு தலா 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடு, கழிப்பறை, மின்சார வசதிகளை மோடி அரசு ஏற்படுத்தி கொடுத்துள்ளது என்ற அமித்ஷா, “ஜிடிபியில் 2023 – 24 ஆண்டில் இந்தியா இரண்டாவது இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது. ஜி 20 நாடுகள் மத்தியில் இந்தியா முதலிடத்திற்கு முன்னேறும். பிரதமர் மோடி தமிழகத்தின் மீது தனி கவனம் செலுத்துகிறார்” என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் வளர்ச்சியை கூர்ந்து கவனித்து வருகிறார். தமிழகத்திற்கான வரியின் பகிர்மான தொகை 90 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மத்திய அரசு வழங்கும் மானியத்தொகை 171% அதிகரித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைக்கு வழங்கப்படும் தொகை 8900 கோடியாக உயர்ந்துள்ளது” என்று தெரிவித்தார்.







