இபிஎஸ் குறை கூறினாலும் எங்கள் பணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் – அமைச்சர் சேகர்பாபு

திமுக அரசு மீது எடப்பாடி பழனிசாமி குறைகூறினாலும் எங்கள் பணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.   சென்னையில் பெய்த மழையில் வடசென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது.…

திமுக அரசு மீது எடப்பாடி பழனிசாமி குறைகூறினாலும் எங்கள் பணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

 

சென்னையில் பெய்த மழையில் வடசென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. பெரம்பூர், வியாசர்பாடி, பட்டாளம், புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகள் அதிகம் பாதிப்புக்குள்ளானது. இந்நிலையில், வெள்ளத்தடுப்பு நடவடிக்கை குறித்து அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனைகூட்டம் நடைபெற்றது.  இதில், சென்னை மேயர் பிரியாராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள், கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர் வெள்ளநீர் வடியாத பகுதிகளை அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார்.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, மழைநீர் 95 % வெளியேற்றப்பட்டுள்ளது. அங்குள்ள கழிவுகளை அகற்ற உத்தரவு பிறப்பித்துள்ளோம். தேவப்படும் இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேடு காரணமாக தண்ணீர் நின்ற அனைத்து இடங்களிலும் ஒரு சொட்டு கூட இந்தாண்டு தண்ணீர் நிற்கவில்லை என்றார்.

2015 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது பெருமழையை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுபயணம் மேற்கொண்டிருக்கிறார். கொசஸ்தலை ஆறு சீரமைக்கும் பணியை திமுக அரசு தொடங்கியுள்ளது. 40 சதவிகித பணிகள் நிறைவடைந்துள்ளன.

திமுக அரசு ஏழை எளிய மக்களுக்கு பயன் தரும் அரசாக செயல்படுகிறது. எடப்பாடி பழனிசாமி குறை கூறினாலும் எங்களின் பணி தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். ஒன்றிய அரசுக்கு பயந்து ஆட்சியை நடத்தியது அதிமுக என குற்றம்சாட்டிய அமைச்சர் சேகர்பாபு, வட சென்னை தாழ்வான பகுதி என்பதாலும், மக்கள் அதிகளவில் இருப்பதாலும் மழைநீர் தேங்குவதற்கு காரணமாக அமைந்ததாக விளக்கமளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.