தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென டெல்லி செல்கிறார். அங்கு குடியரசுத்தலைவர், பிரதமரை அவர் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிவரும் கருத்துக்கள் சர்ச்சைகளை ஏற்படுத்தும் விதமாக அமைவதாக மாநில அரசான திமுக குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், ஆளுநரின் கருத்துக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சியினரும் பதில் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதனால் ஆளுநருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே உள்ள மோதல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு நேற்று கையெழுத்தி திட்டத்தை முன்னெடுத்தார். இதில், நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து பெற்று அந்த கடிதத்தை மனுவாக குடியரசுத்தலைவருக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதனிடையே, ஆளுநரை திரும்ப பெறும் நடவடிக்கையை வரவேற்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை டெல்லி செல்கிறார். இன்று காலை 10 மணி விமானத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணத்தை மேற்கொள்கிறார். ஆளுநருக்கு எதிரான நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் அதிகரித்து வருவதால் அவரது திடீர் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
டெல்லி செல்லும் ஆளுநர், அங்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்து பேசுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநரை திரும்ப பெறக்கோரி திமுக கையெழுத்து பெற்று வருவது தொடர்பாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லியில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.








