யூரோ கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய லீக் போட்டிகளில், இத்தாலி, சுவிட்சர்லாந்து அணிகள் வெற்றி பெற்றன.
இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற லீக் போட்டியில், குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள வேல்ஸ் அணியும், இத்தாலி அணியும் மோதின. போட்டி தொடங்கிய 39வது நிமிடத்தில் இத்தாலி வீரர் மேட்டியோ பெசினா, கோல் அடித்து அசத்தினார். இதனால், முதல்பாதி ஆட்டநேர முடிவில் ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் இத்தாலி அணி முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதி ஆட்டத்தில் வேல்ஸ் அணி வீரர்களால், இத்தாலிக்கு பதிலடி கொடுக்க முடியவில்லை. இறுதியில் ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் இத்தாலி அணி வெற்றி பெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதேபோல், மற்றொரு லீக் போட்டியில், சுவிட்சர்லாந்து- துருக்கி அணிகள் மோதின. போட்டி தொடங்கிய 6வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து வீரர் ஹரிஸ் செஃபெரோவிச் முதல் கோலை பதிவு செய்தார். தொடர்ந்து, 26வது நிமிடத்தில் மற்றொரு கோலை பதிவு செய்த சுவிட்சர்லாந்து அணி, முதல்பாதி ஆட்டத்தில் 2க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதி ஆட்டத்தில் துருக்கி அணி ஒரு கோல் அடிக்க, சுவிட்சர்லாந்து அணியும் மேலும் ஒரு கோல் அடித்து அசத்தியது. இறுதியில், 3க்கு 1 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்து அணி வெற்றி பெற்றது.
இந்திய நேரப்படி இன்று இரவு 9.30 மணிக்கு நடைபெறும் போட்டியில், குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள உக்ரைன் மற்றும் ஆஸ்திரியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதேபோல், மற்றொரு போட்டியில், அதே குரூப் சி பிரிவில் உள்ள வடக்கு மாசிடோனியா அணியும், நெதர்லாந்து அணியும் மோதுகின்றன.
நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கும் போட்டியில், ’பி’ பிரிவில் இடம்பெற்றுள்ள ரஷ்யா, டென்மார்க் அணிகள் மோதுகின்றன. இதே போல், பீட்டர்ஸ்பெர்க் நகரில் நடைபெறும் மற்றொரு போட்டியில், பெல்ஜியம் அணி பின்லாந்தை எதிர்கொள்கிறது.