ஈரோடு மாவட்ட ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் விலகி, சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, அதிமுக இபிஎஸ் அணியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், அதிமுக கட்சியை எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இரட்டை தலைமை முறையில் வழிநடத்தி வந்தனர். ஆனால் உட்கட்சி பூசல் காரணமாக இபிஎஸ், ஓபிஎஸ் என இரு அணிகளாக அதிமுக பிரிந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனைத் தொடர்ந்து இரு அணியில் இருக்கும் கட்சி நிர்வாகிகள் சிலர், மாற்று அணிகளில் தங்களை இணைத்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர், ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்து வந்த கோவை செல்வராஜ், அதிமுகவிலிருந்து விலகி, திமுகவில் இணைந்தார். மேலும் பல நிர்வாகிகள், மாற்று அணிகளுக்கும், மாற்று கட்சிக்கும் மாறி வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : மகாத்மா காந்தியின் போராட்டத்திற்கு உத்வேகம் அளித்த தில்லையாடி வள்ளியம்மை!
இந்நிலையில், அதிமுக ஓபிஎஸ் அணியின் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளராக இருந்த முருகானந்தம், தனிப்பட்ட சில காரணங்களால் ஓபிஎஸ் அணியிலிருந்து விலகுவதாக இன்று காலை நியூஸ்7 தமிழுக்கு தகவல் தெரிவித்திருந்தார். அதன்படி ஓபிஎஸ் அணியிலிருந்து விலகிய முருகானந்தம் இபிஎஸ் அணியில் இணைந்தார்.
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான, ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் டி. முருகானந்தம், ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் ஏ.எல். தங்கராஜ், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் சிவமுருகன், மாவட்ட வர்த்தக அணிச் செயலாளர் எஸ்.ராஜமாணிக்கம், கருங்கல்பாளையம் பகுதி கழக செயலாளர் ஆர்.அர்த்தநாரீஸ்வரன் ஆகியோர் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து, அதிமுக இபிஎஸ் அணியில் இணைந்தனர்.