முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா தமிழகம்

மகாத்மா காந்தியின் போராட்டத்திற்கு உத்வேகம் அளித்த தில்லையாடி வள்ளியம்மை!

ஆங்கிலேயருக்கு எதிராக போராடி, உயிர்நீத்த விடுதலைப் போராட்ட வீரமங்கை தில்லையாடி வள்ளியம்மை குறித்து விரிவாகக் காணலாம். 

மயிலாடுதுறை (அன்றைய தஞ்சாவூர் மாவட்டம்) அடுத்த தில்லையாடியை சேர்ந்த நெசவாளர் முனுசாமி -மங்கம்மாள் தம்பதிக்கு ,தென் ஆப்பிரிக்காவில் ‘ஜோகன்னஸ்பர்க்’ நகரில் 1898ம் ஆண்டு, பிப்ரவரி 22ம் தேதி வள்ளியம்மாள் பிறந்தார். தென்ஆப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு ஆங்கிலேயரால் விதிக்கப்பட்ட பல்வேறு கொடுமைகளை எதிர்த்து, 1913-ல் காந்தியடிகள் போராட்டங்கள் நடத்தினார். காந்தியின் சொற்பொழிவுகள் சிறுமி வள்ளியம்மையின் மனதில் ஆழமாக பதிந்து, விடுதலைக் கனலை மூட்டின.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சிறுமியான வள்ளியம்மை காந்தி நடத்திய போராட்டங்களில் பங்கேற்றார். ஆங்கிலேய அதிகாரி ஒரு முறை காந்தியை நோக்கி துப்பாக்கியை நீட்டினார். அப்போது முதலில் என்னை சுடு பார்க்கலாம் என முன்வரிசையில் நின்றார் வள்ளியம்மை. கிறிஸ்தவச் சடங்கு திருமணங்கள் மட்டுமே செல்லும், பதிவு செய்யப்படும் என்ற சட்டத்தை, எதிர்த்து ஜோகன்னஸ்பர்க்கில் போராட்டம் நடத்திய மகளிர் சத்தியாகிரகப் படையினருக்கு வள்ளியம்மை தொண்டு செய்தார்.

இதையும் படியுங்கள் : ஜேஎன்யு மாணவர்கள் மீது தாக்குதல் – நடவடிக்கை எடுக்க கனிமொழி வலியுறுத்தல்

தடையை மீறி போராடியதற்காக 3 மாதம் சிறையா? அபராதம் செலுத்தி விடுதலையா? என்ற போது, பணம் செலுத்துவது சத்தியாகிரகத்துக்கு இழுக்கு என துணிச்சலுடன் மறுத்து சிறைக்குச் சென்றார். ஒரு கொடி கூட இல்லாத கூலிகளுக்கு இவ்வளவு வெறியா? என்றார் ஓர் ஆங்கிலேய அதிகாரி. உடனே தனது சேலையைக் கிழித்து அதிகாரியின் முகத்தில் எறிந்த வள்ளியம்மை, ‘இதுதான் எங்கள் தேசியக் கொடி’ என்றார்.

சுகாதாரமற்ற சூழல், அதிகப்படியான சிறைப்பணியால் வள்ளியம்மை உடல்நலம் பாதிக்கப்பட்டது. முன்கூட்டியே விடுதலை பெற வாய்ப்பு கிட்டியபோதும், அதனை ஏற்க மறுத்தார். சிறையில் இருந்து விடுதலை ஆன 10 நாட்களில் தில்லையாடி வள்ளியம்மை, 1914 பிப்ரவரி 22-ம் தேதி, தனது பிறந்தநாளிலேயே மறைந்தார்.

இந்தியாவின் ஒரு புனித மகளை இழந்துவிட்டோம். ஏன், எதற்கு என்று கேட்காமல் கடமையைச் செய்தவர் வள்ளியம்மை என்று கூறிய மகாத்மா காந்தி, வள்ளியம்மை மனோபலம், தன்மானம் மிக்கவர் என்றும், அவரது தியாகம் இந்திய சமூகத்துக்கு நிச்சயம் பலன் தரும் என்றும் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டார்.

ஒரு முறை தில்லையாடிக்கு வந்த காந்தி, அந்த ஊர் மண்ணை கண்ணில் ஒற்றிக்கொண்டு கண்கலங்கினார். ‘பலன் கருதாமல் தியாக உணர்வுடன் போராடி வெற்றி கண்ட தில்லையாடி வள்ளியம்மைதான் எனக்கு முதன்முதலில் விடுதலை உணர்வை ஊட்டினார் என புகழ்ந்தார்.

வள்ளியம்மையின் தியாகத்தைப் போற்றும் வகையில், தில்லையாடியில் நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. பொது நூலகம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. 16-வது வயதிலேயே ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடி உயிர்நீத்த ‘முதல் விடுதலைப் போராளி’ வள்ளியம்மை, ஒரு தமிழ்ப் பெண் என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. 16 வருடங்கள் மட்டுமே வாழ்ந்து சரித்திரத்தில் இடம் பிடித்தார் தமிழ் இன வீரமங்கை வள்ளியம்மை.

– ரா.தங்கபாண்டியன், நியூஸ்7 தமிழ்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நடிகர் சதீஷ் விளக்கத்திற்கு தர்ஷா குப்தா மறுப்பு -மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் ஆடை பிரச்னை

EZHILARASAN D

பாபர் மசூதி இடிப்பு தினம்; ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

G SaravanaKumar

டிடிவி தினகரன் விடுவிப்பு ; அதிமுகவில் சலசலப்பு

Web Editor