ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளன. ஈரோடு இடைத் தேர்தலில் வெற்றி அரசியல் தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 27-ஆம் தேதி 238 வாக்குச் சாவடிகளில் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 74.69 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 82,021 ஆண்கள், 87,907 பெண்கள், 17 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1,69,945 பேர் வாக்களித்துள்ளனர்.
நாளை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் சான்றிதழ் கொடுக்கும் வரை அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் செய்துள்ளதாகவும் , அமைதியாக , சமூகமாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு அடையாள அட்டையில்லாத நபர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசி மோகன் தெரிவித்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு 600 காவல்துறையிரும், கிழக்கு தொகுதிக்கு 150 காவலர்கள் என மொத்தம் 750 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை காலை 8 மணிக்கு தொடங்கும். முதலில் தபால் வாக்குகள் பிரித்து எண்ணப்படும். பின்னர் அரை மணி நேரம் கழித்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். 15 சுற்றுக்கள் வரை வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அதன் பின்னர் வெற்றி பெற்றவருக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
ஈரோடு இடைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நாளை தொடங்கும் நிலையில் யார் வெற்றி வாகை சூடப்போகிறார்கள் என அரசியல் வட்டாரத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
– யாழன்







