கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைந்து உள்ள விவேகானந்தர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகம் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை அமைப்பு சார்பில் சின்னத்திரை பிரபலங்கள், யூடியூப் பிரபலங்களுக்கு டாக்டர் பட்டத்தை வழங்கினார்.
இந்த விழாவில் இசை அமைப்பாளர் தேவா, சின்னத்திரை பிரபலம் ஈரோடு மகேஷ், யூடியுப் பிரபலங்களான பரிதாபங்கள் கோபி மற்றும் சுதாகர் உள்ளிட்டோருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தற்போது இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்று மனித உரிமை சங்கம் என்றே ஓர் அமைப்பே இல்லை என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அந்த நிகழ்வுக்கான அழைப்பிதழில் இந்திய அரசின் முத்திரையும் அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரும் சட்டவிரோதமாக அச்சிடப்பட்டிருந்தது என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் கூறுகையில், இங்கு இப்படி ஒரு தவறான செயல் நடந்ததற்கு நாங்கள் வருந்துகிறோம். நீதிபதி வள்ளிநாயகம் வருவதாக எங்களிடம் சொன்னதால் நாங்கள் இடம் கொடுத்துள்ளோம். இதுதொடர்பாக எங்கள் தரப்பில் நடவடிக்கையை தொடங்கிவிட்டோம். காவல்துறையிடம் புகார் அளித்துளோம்” என்று கூறினார்.
அண்மைச் செய்தி :இந்தூர் டெஸ்ட் – முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 47 ரன்கள் முன்னிலை
இந்த விவகாரம் தொடர்பாக ‘பரிதாபங்கள்’ கோபி கூறுகையில், “அண்ணா பல்கலைக்கழகம் என்ற பெயரால் நாங்கள் ஏமாந்து விட்டோம். யாரை நம்புவது என்றே தெரியவில்லை வெறும் பெயரை வைத்து இனிமேல் நம்ப கூடாது. எந்த நிகழ்ச்சிக்கு யார் அழைத்தாலும் பின்புலத்தை பரிசோதித்தே இனி செல்ல வேண்டுமென முடிவெடுத்துள்ளோம். சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக முதலில் ஹாரிஸ் என்பவர் அழைத்த போது நான் அழைப்பை மறுத்தேன். சட்டப்படி அணுக வேண்டும் என நினைக்கிறோம்” என்று தெரிவித்தார்.







