ஈரோடு இடைத்தேர்தலில், ஓபிஎஸ் அணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் செந்தில் முருகன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு, அதற்கு பிப்ரவரி 27ல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பளார்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக இபிஎஸ் அணி சார்பில் கே.எஸ். தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஓபிஎஸ் அணி சார்பில் செந்தில் முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஈரோடு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இன்று அதிமுக ஓபிஎஸ் அணியின் வேட்பாளர் செந்தில் முருகன் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
இரட்டை இலை சின்னம் கேட்டு ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால், அதிமுக சார்பில் படிவம் ஏ & பி தாக்கல் செய்யப்பட வில்லை. வேட்பு மனு பரிசீலனையின் போது, கட்சித் தலைமையால் அங்கீகரிக்கப்படும் படிவம் ஏ & பி, தாக்கல் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, ஈரோட்டில் ஓபிஎஸ் அணியின் அமைப்புச் செயலாளர் கு.பா.கிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், வேட்பாளர் செந்தில் முருகன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், “பாஜக, வேட்பாளரை அறிவித்தாலும், நாங்கள் வாபஸ் பெற மாட்டோம். எங்களது வேட்பாளரை வாக்காளர்கள் வெற்றி பெற செய்வார்கள். எங்களுக்கே இரட்டை இலை சின்னம் கிடைக்கும். அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் செந்தில் முருகன் தான். ஓபிஎஸ் இபிஎஸ் இணைந்தாலும், எங்கள் வேட்பாளர் செந்தில்நாதன் தான். எங்கள் வேட்பாளரை எக்காரணத்தைக் கொண்டும் மாற்ற மாட்டோம்” என்று தெரிவித்தனர்.