அதிமுக பொதுக்குழு வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது கூடுதல் ஆதாரங்களை சமர்ப்பிக்கவும், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் வழங்கவும், பொதுக்குழு உறுப்பினர்களிடம் உறுதி மொழி கடிதத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு பெற்றுள்ளது.
கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற அமர்வு தீர்ப்பு வழங்கியதை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரை சுய விருப்பத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுத்ததாகவும், முழுமையான ஆதரவு அளிப்பதாகவும், 2500க்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆதரவு கடிதத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு பெற்றுள்ளது. . அவ்வாறு பெறப்பட்ட ஆதரவு கடிதங்களை உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வரும் போது கூடுதல் ஆதாரங்களாக சமர்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்த உறுதிமொழிக் கடிதங்களை தலைமைத் தேர்தல் ஆணையத்திலும் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் இன்று நேரில் வழங்குகிறார்.
மேலும் அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்தலுக்கான உட்கட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு இறங்கியுள்ளது.







