தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசி மற்றும் மேகதாது அணை விவகாரம் குறித்து பிரதமர் மோடியிடம் பேசியதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியும் அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும் தனித்தனியாக நேற்று டெல்லி சென்றனர்.
இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அறையில், பிரதமர் மோடியை இருவரும் சந்தித்துப் பேசினர். சுமார் 35 நிமிடங்கள் வரை ஆலோசனை நடத்திய இருவரும் பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
தமிழ்நாட்டிற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகளை விரைந்து வழங்கிட வேண்டும் என பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியதாக எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார். அதிமுகவில் எந்த தொண்டருக்கும் அதிருப்தி இல்லை என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, சசிகலா குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்







