சேலத்தில் நியூஸ் 7 தமிழ் சார்பில் இன்றும் நாளையும் நடைபெறும் பிரம்மாண்ட கல்வி கண்காட்சியை எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
பிளஸ் 2 முடித்த மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் விதமாக நியூஸ் 7 தமிழ் பிரமாண்ட கல்விக் கண்காட்சிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் கோவையில் இரண்டு ஆண்டுகளாக நியூஸ் 7 தமிழ், கல்வி கண்காட்சியை நடத்தியது.
இந்தாண்டு கொடிசியா அரங்கில் விமரிசையாக நடைபெற்ற கண்காட்சியில், 40க்கும் மேற்பட்ட முன்னணி கல்வி நிறுவனங்கள் அரங்குகளை அமைத்தன. மேலும், இந்தக் கண்காட்சி வாயிலாக உடனடி மாணவர் சேர்க்கைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
இதையும் படியுங்கள் : கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் 40 இடங்கள் தான் கொடுப்பார்கள் – ராகுல் காந்தி!
இதைத்தொடர்ந்து மதுரை காந்தி மியூசியத்தில் இந்தாண்டு நியூஸ் 7 தமிழ் சார்பில் கல்வி கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியில் 50க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் பங்கேற்றன. மேலும், கண்காட்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை குலுக்கலில் பரிசு வழங்கப்பட்டது. இரண்டு நாள் நடைபெற்ற கண்காட்சியில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
மதுரையில் நடைபெற்ற கல்விக் கண்காட்சிகளுக்கு பெற்றோர், மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மாபெரும் வரவேற்பு அளித்தன. அந்த வரவேற்பை தொடர்ந்து சேலம் மற்றும் சென்னையில் இன்றும், நாளையும் கல்வி கண்காட்சி நடைபெறுகிறது.
அந்த வகையில் சேலம் மூவேந்தர் அரங்கத்தில் கல்வி கண்காட்சியை அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். முன்னதாக நியூஸ் 7 தமிழ் நிர்வாக ஆசிரியர் தியாகச்செம்மல் பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரும் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய நியூஸ்7 தமிழின் நிர்வாக ஆசிரியர் தியாகச்செம்மல், “நியூஸ் 7 தமிழின் தமிழ் ரத்னா விருதுக்காக அழைத்த போது, முதலமைச்சர் பணியின் போது கடுமையான சூழ்நிலையிலும், எடப்பாடி பழனிசாமி வருகை தந்து சிறப்பித்தார். நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் அவருக்கு கடமைப்பட்டுள்ளோம். எளிமை ஜனநாயத்தின் வலிமை. அதனை இவரிடம் பார்க்கிறோம். அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் இடஒதுக்கீடு என்பது சாதாரண விஷயமில்லை. இப்படி பல்வேறு சாதனைகளை தெரிவிக்கலாம்” என்று கூறினார்.
இந்த கல்விக் கண்காட்சியில், 20-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. மேலும், தேசிய வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் மூலம் கல்விக்கடன் பெறுவதற்கான அரங்குகளும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.









