’வார்த்தை ஜாலங்களால் முதலமைச்சர் மக்களை ஏமாற்றி வருகிறார்’-இபிஎஸ்

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை திறந்து வைத்ததுதான் திமுக அரசின் 8 மாத ஆட்சியின் சாதனை என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக…

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை திறந்து வைத்ததுதான் திமுக அரசின் 8 மாத ஆட்சியின் சாதனை என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. வனவாசி, ஜலகண்டாபுரம், நங்கவள்ளி பேரூராட்சி வேட்பாளர்களை எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அவர், சட்டமன்ற தேர்தலின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டினார். வார்த்தை ஜாலங்கள் மூலம் முதலமைச்சர், தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி வருவதாகக் கூறிய எடப்பாடி பழனிசாமி, மக்களுக்கு பயன்தரும் திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தவில்லை என விமர்சித்தார்.

முன்னதாக, சேலம் நங்கவள்ளி அருகே உள்ள பெரியசோரகை சென்றாயபெருமாள் கோயிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். முதற்கட்ட பரப்புரையை சிவகாசியில் நாளை தொடங்கவுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி, சாமி தரிசனம் செய்தார். சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தல்களின் போதும் இக்கோயிலில் சாமி தரிசனம் செய்த பிறகே எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரையை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.