சட்டப்பேரவையில் அதிமுக வின் ஓ பன்னீர் செல்வம் அருகே அமர்வதை எடப்பாடி பழனிசாமி தவிர்த்து தன் அறையிலேயே அமர்ந்துள்ளார்.
2023ம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் ஆர் என் ரவி உரையுடன் கடந்த ஒன்பதாம் தேதி கூடியது. கூட்டனி கட்சியினர் ஆளுநரை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானம் வாசித்துக் கொண்டிருக்கும்போது ஆளுநர் ரவி திடீரென வெளியேறினார். அன்றைய தினம் எடப்பாடி பழனிச்சாமியும்
ஓ பன்னீர் செல்வமும் அருகருகே அமர்ந்து பேரவை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து நேற்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் உரிய முடிவெடுக்க கோரி எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் சபாநாயகரை நேரில் சந்தித்து வலியுறுத்தினர். அதன் பின்னரும் பேரவை நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமியும் ஓ பன்னீர் செல்வமும் அருகருகே அமர்ந்து பேரவை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
இந்நிலையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் இன்று சட்டப்பேரவையில் இன்று நடந்து வருகிறது. எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் உரிய முடிவு எடுக்காததை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து பேரவை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளனர்.

பேரவை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்த எடப்பாடி பழனிச்சாமி தலைமை செயலகம் வந்த போதும் பேரவை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் அறையிலேயே அமர்ந்துள்ளார். இதன் மூலம் ஓ.பி.எஸ் அருகே அமர்வதை எடப்பாடி பழனிசாமி தவிர்த்துள்ளதாக சொல்லப்படுகிறது.







