நிலவுக்கு ஃப்ரீ டிக்கெட் : ஜப்பான் தொழிலதிபர் அறிவிப்பு

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் 2023-ம் ஆண்டு நிலவுக்கு அனுப்பப்படவுள்ள விண்கலத்தில் தன்னுடன் பயணிக்க உலகம் முழுவதிலும் இருந்து எட்டு நபர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான விண்வெளி போக்குவரத்து கட்டணத்தைத் தாமே செலுத்தி இருப்பதாக ஜப்பானியத்…

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் 2023-ம் ஆண்டு நிலவுக்கு அனுப்பப்படவுள்ள விண்கலத்தில் தன்னுடன் பயணிக்க உலகம் முழுவதிலும் இருந்து எட்டு நபர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான விண்வெளி போக்குவரத்து கட்டணத்தைத் தாமே செலுத்தி இருப்பதாக ஜப்பானியத் தொழிலதிபர் மெய்சாவா தெரிவித்துள்ளார்.

தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வரும் 2023-ம் ஆண்டு நிலவுக்குப் பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. இந்த விண்வெளி பயணத்தில் முதன் முதலாகப் பதிவு செய்தவர் ஜப்பானிய தொழிலதிபரான மெய்சாவா. இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் தான் செல்லவுள்ள விண்வெளி ராக்கெட்டில் நிலவுக்குச் செல்ல ஆர்வமாகவுள்ள பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த விண்வெளி பயணத்தில் தன்னுடன் எட்டு நபர்களை அழைத்துச் செல்வதாக அவர் கூறியுள்ளார். அவர்களுக்கான விண்வெளி போக்குவரத்து கட்டணங்கள் முன்கூட்டிய செலுத்தி இருப்பதாக மெய்சாவா தெரிவித்துள்ளார்.

இது குறித்த வீடியோவில் பேசியுள்ள மெய்சாவா“ நிலவில் கால் பதிக்கவேண்டும் என ஆர்வமாக உள்ள பொதுமக்கள் என்னுடன் விண்வெளி பயணத்தில் இலவசமாகக் கலந்துகொள்ள நான் அழைப்புவிடுக்கிறேன். இந்த பயணத்தில் மொத்தம் பத்து முதல் பன்னிரண்டு நபர்கள் இருப்பார்கள். ஆனால் நான் என்னுடைய எட்டு நபர்களை அழைத்துச் செல்ல திட்டமிட்டு இருக்கிறேன். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நிலவுக்கு மனிதர்களை அழைத்துச் செல்ல 2023-ம் ஆண்டு திட்டமிட்டுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நிலவுக்கு அனுப்பவுள்ள ‘Starship’ விண்வெளி ராக்கெட் தயாரிப்பு நிலையில் உள்ளது. அதற்காக நாம் இரண்டு வருடங்கள் காத்திருக்கவேண்டும். பூமியிலிருந்து நிலவுக்கு செல்ல மூன்று நாட்கள் ஆகும். அதேபோல் நிலவிலிருந்து பூமிக்கு வர மூன்று நாட்கள் ஆகும்.

ஜப்பானியத் தொழிலதிபர் மெய்சாவா

இந்த மொத்த பயணத்திற்கு நான் உலகம் முழுவதிலும் இருந்து தேர்வுச் செய்யும் எட்டு நபர்களுக்குப் பயணச் செலவு உட்பட அனைத்து செலவையும் ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளேன். இதனால் நாம் செல்வது ஒரு தனிப்பட்ட பயணமாக இருக்கும். இதற்கு இரண்டு தகுதிகள் மட்டும் தேவைப்படுகிறது ஒன்று நீங்கள் விண்வெளிக்குச் செல்ல ஆர்வமாக உள்ள நபராக இருக்கவேண்டும் அதற்கான பணிகளில் நீங்கள் ஈடுபட வேண்டும். இரண்டு இதேபோல் விண்வெளிக்குச் செல்ல ஆர்வமாக உள்ள மற்ற குழு உறுப்பினர்களுக்கு நீங்கள் துணையாக, பக்கபலமாக இருக்கவேண்டும். இந்த இரு தகுதிகளும் உங்களுக்கு இருந்தால் நீங்கள் உங்களைப் பற்றி தகவலை எனக்கு அனுப்பலாம்.

நிலவிலிருந்து பூமியின் உதயம்

நிலவை நான் தேர்ந்தெடுக்கக் காரணம் நிலவில் கால் பதிக்கவேண்டும் என்ற ஆர்வம்தான். பூமி என்ற நம்முடைய வீடு எவ்வளவு அழகானது என்பதை நம்மால் உணர முடியும். மனிதர்களாகிய நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பதை நான் அறிந்துகொள்ளமுடியும்.

பொதுவாகப் பூமியிலிருந்துதான் நிலவைக் கண்டு ரசித்திருப்போம். ஆனால் விண்வெளி பயணத்தில் பூமியின் நீல அழகை நிலவிலிருந்து கண்டு ரசிக்கும் ஒரு புது அனுபவத்தைப் பெறமுடியும். நிலவில் இருள் பகுதியிலிருந்து வெளியே வந்தால் பூமி உதிப்பதைப் பார்க்கமுடியும். நிலவுக்குச் செல்ல ஆர்வமுள்ளவர்கள் இதுவொரு அறிய வாய்ப்பு” எனக் கூறியுள்ளார் மெய்சாவா.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் நிலவுக்குச் செல்ல ஆர்வமாக உள்ளவர்களுக்காக ‘Dear Moon’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். பொதுவாக விண்வெளி வீரர்கள் மட்டுமே நிலவுக்கு நாசா விண்கலத்தில் சென்று வந்த நிலையில் தற்போது எலான் மஸ்கின் தனியார் நிறுவனமாக ஸ்பேஸ் எக்ஸ் இந்த அறிவிப்பைக் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதற்கு முன்பு இதுபோன்ற ஒரு திட்டம் இருந்தது கிடையாது. “மனிதர்கள் பயணம் செய்யப் பாதுகாப்பான விண்கலமாக ஸ்பேஸ் எக்ஸ் இருக்கும்” என எலான் மஸ்க் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.