அதிமுக கூட்டணியிலிருந்து விலகி, வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அதிரடியாக பொதுக்குழு கூட்டத்தில் சரத்குமார் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இன்று தூத்துக்குடியில் நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சியின் ஆறாவது பொதுக்குழு கூட்டத்தில் தலைவராக சரத்குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவதற்கான சமிக்ஞையாக கமல்ஹாசனுடனான அவரது சமீபத்திய சந்திப்பு அமைந்துள்ளது.

எதிர்வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரக்கூடிய நிலையில், அதிமுக, திமுக கட்சிகள் தங்களுடைய கூட்டணிகளை உறுதிப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்குமார் இன்று தூத்துக்குடியில் நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சியின் ஆறாவது பொதுக்குழு கூட்டத்தில் சில அதிரடி முடிவுகளை அறிவித்துள்ளார்.
இந்த பொதுக்குழுவில், தமிழகத்தில் வட இந்தியர்கள் அனைத்து துறைகளிலும் நுழைந்துவிட்டதால் தமிழர்களுக்கான வேலை வாய்ப்பினை உறுதிசெய்ய 90 சதவிகித இடஒதுக்கீடு வேண்டும் என்றும், தூத்துக்குடி விமான நிலையத்திற்கு காமராசர் பெயரை அறிவிக்க வேண்டும் என்றும் 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கமல் மற்றும் சரத்குமார் கூட்டணியில் இணைவதற்கு இந்திய ஜனநாயகக் கட்சிக்கு சமக பொதுக்குழு வரவேற்பளித்துள்ளது., ஏற்கெனவே கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக கூட்டணியில் கடுமையாக உழைத்துவிட்டோம் என்றும், தனித்து போட்டியிடுகிறோம் என்று அறிவித்த பின்னரும் சமகவுக்கு கூட்டணி கட்சி மதிப்பளிக்கவில்லை என சரத்குமார் கூறியுள்ளார். மேலும், அதிமுக, திமுக இல்லாத ஆட்சி அமைய வெற்றி வியூகம் அமைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஆளும் அதிமுக கட்சியை கடுமையாக சாடிய சரத்குமார், சமீபத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு தமிழக அரசு வழங்கிய உள்ஒதுக்கீடு என்பது உள்நோக்கத்துடன் வழங்கப்பட்டது என்றும் விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.







