டெல்லியில் அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு!

டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இதனிடையே தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, த.வெ.க., நாம் தமிழர் கட்சி ஆகிய 4 முனை போட்டிகள் ஏற்பட வாய்ப்புள்ளது. திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இடம் பெற்றுள்ள நிலையில் கூட்டணி கட்சிகளிடயே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை துவங்கப்படவில்லை. எனினும், பாஜக, அதிமுக இடையே தலைவர்கள் மட்டத்தில் மறைமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனிடையே நேற்று மதுரையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தினகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதற்கிடையில் கூட்டணி விவகாரங்கள் குறித்து பேச, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்றார். இந்நிலையில் நேற்று இரவு பாஜ மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை அவரது இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.