தமிழ்நாட்டில் இருந்து அடுத்த பிரதமராக வருவதற்கு தகுதியான நபர் எடப்பாடி பழனிசாமி தான் என அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த 9 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்காக செயல்படுத்திய திட்டங்களை பட்டியலிட முடியுமா என முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு வேலூர் பொதுக்கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் அளித்தார். அப்போது தமிழ்நாட்டில் இருந்து ஏற்கனவே இருவருக்கு பிரதமராக வருவதற்கான வாய்ப்புகள் இருந்தது. ஆனால் அந்த வாய்ப்பு திமுகவால் தான் கைநழுவிப் போனது. தற்போது தமிழ்நாட்டில் இருந்து ஒருவர் பிரதமராக வர வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசி இருந்தார்.
இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இந்த கருத்து குறித்து அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் இருந்து இரு பிரதமர்களை தவறவிட்டதாக அமித்ஷா கூறியதில் உண்மைத்தன்மை இருக்கிறது. அதை யாராலும் மறுக்க முடியாது. காமராஜர், மூப்பனார் ஆகிய இருவரும் திறமைமிக்கவர்கள் என்பதால் பிரதமராக வர வேண்டும் என பல மாநில முதல்வர்கள் விரும்பினார்கள். வடக்கில் இருந்து எதிர்ப்பு வந்தது ஆச்சர்யபடுவதற்கில்லை. கருணாநிதி செய்த ஊழல்களை நன்கு தெரிந்தவர்கள் என்பதால் அவர்கள் இருவரையும் பிரதமராக விடாமல் முட்டுக்கட்டை போடப்பட்டது.
தமிழ்நாட்டில் இருந்து பிரதமாக வரக்கூடிய தகுதி உடைய ஒரே நபர் எடப்பாடி பழனிசாமி தான். இந்திய, உலக அரசியலை தெரிந்தவர். விரல்நுனியில் புள்ளி விவரங்களை வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி தான் தமிழ்நாட்டில் இருந்து பிரதமாராகக் கூடிய தகுதி உள்ளவர். பாஜகவின் கொள்கைகளால், அதிமுகவின் வாக்கு வங்கியை இழந்துவிட்டோம். மதத்தை கடைபிடிப்பதால் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், தாழ்த்தப்பட்டவர்களின் வாக்கு வங்கியை இழந்துவிட்டோம். பாஜகவின் கொள்கையை மாற்ற சொல்லியுள்ளோம். மாற்றுவார்கள் என நம்புகிறோம் என பொன்னையன் தெரிவித்துள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா








