புதுமைப்பெண் திட்டம் கொண்டுவரப்பட்டதன் காரணமாக, உயர்கல்வியை இடையில் நிறுத்திய மாணவிகள் மீண்டும் கல்வியை தொடர்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயர்கல்வியில் மாணவிகளின் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கவும், இடைநிற்றலை தவிர்க்கவும் தமிழ்நாடு அரசால் செப்டம்பர் 2022 இல் கொண்டு வரப்பட்டது புதுமைப்பெண் திட்டம். 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவிகள் கல்லூரிகளில் சேரும்போது, திட்டத்தின் கீழ் ரூ.1000 மாதந்தோறும் உதவித்தொகையாக வழங்கப்படுகின்றது.
இந்த திட்டத்தின் மூலமாக கல்லூரிகளில் சேரும் மாணவியரின் விகிதம் 26% அதிகரித்துள்ளதாக உயர்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு ஏற்கனவே கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திய மாணவிகள் கூட மீண்டும் படிப்பை தொடர்வதாக தரவுகள் தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.
புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் இதுவரை 1,09,395 மாணவிகள் பதிவு செய்துள்ளனர். பொறியியல் படிப்புகளில் 9285 மாணவிகளும், கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் 83,757 மாணவிகளும் பதிவு செய்துள்ளனர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகளை பொருத்தவரை, 2- 5 வருட இடைவெளிக்கு பிறகாக 1820 மாணவிகள் மீண்டும் கல்வியை தொடர தொடங்கியுள்ளனர். 6-10 வருட இடைவெளிக்கு பிறகாக 54 மாணவிகளும், 11-20 வருட இடைவெளிக்கு பிறகாக 4 மாணவிகளும் கல்வியை தொடங்கியுள்ளனர். பொறியியல் படிப்புகளில் 2-5 வருட இடைவெளிக்கு பிறகாக 170 மாணவிகளும், 6-10 வருட இடைவெளிக்கு பிறகாக 14 மாணவிகளும், 11-20 வருட இடைவெளிக்கு பிறகாக 2 மாணவிகளும் கல்வியை தொடர்கின்றனர்.
ஐடிஐ படிப்புகளில், 2-5 வருட இடைவெளிக்கு பிறகாக 370 மாணவிகளும், 6-10 வருட இடைவெளிக்கு பிறகாக 133 மாணவிகளும், 11-20 வருட இடைவெளிக்கு பிறகாக 198 மாணவிகளும் கல்வியை தொடர்கின்றனர். பாலிடெக்னிக் படிப்புகளில், 2-5 வருட இடைவெளிக்கு பிறகாக 492 மாணவிகளும், 6-10 வருட இடைவெளிக்கு பிறகாக 56 மாணவிகளும், 11-20 வருட இடைவெளிக்கு பிறகாக 25 மாணவிகளும் கல்வியை தொடர்கின்றனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், சில வருட இடைவெளிக்குப் பிறகு கல்வியைத் தொடர்வதற்கு புதுமைப்பெண் திட்டமே காரணம் எனவும் கூறியுள்ளனர்.
- பி.ஜேம்ஸ் லிசா









