வேலூரில் 27-ம் தேதி திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி!

திமுக அரசை கண்டித்து வேலூரில் 27-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில், வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகராட்சியில் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய அரசு தலைமை மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் திறக்கப்படவில்லை. தற்போதுள்ள பழைய மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள்; மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஊழியர்கள் இல்லாத காரணத்தாலும்; போதிய கட்டட வசதி இல்லாத காரணத்தாலும், நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமலும், கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்க முடியாமலும், அப்பகுதிவாழ் மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

அதேபோல், குடியாத்தம் நகராட்சி வாழ் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக்கூட செய்து தராமலும், சுகாதார சீர்கேடுகளை சரிசெய்யாமலும், நகராட்சி நிர்வாகம் முற்றிலுமாக செயலிழந்துள்ளது. திமுக ஸ்டாலின் மாடல் அரசின், இத்தகைய மக்கள் விரோதப் போக்கிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்நிலையில், குடியாத்தம் நகரில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு தலைமை மருத்துவமனையை திறந்து வைக்காமல் காலம் தாழ்த்தியும், நகராட்சி வாழ் மக்களின் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றாமலும் மெத்தனப் போக்கோடு இருந்து வரும் திமுக ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் குடியாத்தம் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், மக்கள் நலன் கருதி புதிய அரசு தலைமை மருத்துவமனையை உடனடியாகத் திறந்திட வலியுறுத்தியும், மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றிட வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேலூர் புறநகர் மாவட்டத்தின் சார்பில் 27.1.2026 செவ்வாய்க் கிழமை காலை 10 மணியளவில், குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், திருப்பத்தூர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான K.C. வீரமணி தலைமையிலும், வேலூர் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் த.வேலழகன், குடியாத்தம் நகரக் கழகச் செயலாளர் J.K.N.பழனி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வேலூர் புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத, திமுக அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.