மதுபான உயிரிழப்புகள் தொடர்பாக அரசு அதிகாரிகள் தவறான தகவலை பரப்பி வருகின்றனர் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

தஞ்சாவூரில் சயனைடு கலந்து மதுபானம் குடித்து இருவர் உயிரிழந்த விவகாரத்தில், தற்கொலை செய்து கொண்டதாக அரசு அதிகாரிகள் தவறான தகவலை பரப்பி வருவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை கிண்டி ராஜ்பவனில்…

தஞ்சாவூரில் சயனைடு கலந்து மதுபானம் குடித்து இருவர் உயிரிழந்த விவகாரத்தில், தற்கொலை செய்து கொண்டதாக அரசு அதிகாரிகள் தவறான தகவலை பரப்பி வருவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து புகார் மனு அளித்தார். முன்னதாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் சைதாப்பேட்டை சின்னமலையில் இருந்து ஆளுநர் மாளிகையை நோக்கி அதிமுகவினர் பேரணியாக சென்றனர். எடப்பாடி பழனிசாமியில் தலைமையில் நடைபெற்ற பேரணியில் பல்லாயிரக்கணக்கான அதிமுகவினர் கலந்து கொண்டதால் சென்னை சைதாப்பேட்டை – கிண்டி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பின்னர் ஆளுநர் மாளிகை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கடந்த 13 ஆண்டுகளாக கள்ளச்சாராய மரணம் இல்லை என்பதை தற்போதைய அமைச்சரே சட்டப்பேரவையில் பதிவு செய்துள்ளார். தஞ்சாவூரில் சயனைடு கலந்து மதுபானம் குடித்து இருவர் உயிரிழந்த விவகாரத்தில், இருவரும் தற்கொலை செய்து கொண்டனரா என விசாரணை மேற்கொள்வது விந்தையாக உள்ளது. இருவர் உயிரிழப்பு சம்பவத்தில் அரசு அதிகாரிகள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

தமிழ்நாடு அரசு எந்தெந்த துறைகளில் ஊழலில் ஈடுபட்டுள்ளது என்பதை ஆதாரங்களுடன் ஆளுநரிடம் வழங்கியுள்ளோம். கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்கள் குறித்தும், போலி மதுபானங்கள் குறித்தும் ஆளுநரிடம் புகார் தெரிவித்தோம்.

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில், மனிதக்கழிவு கலந்த விவகாரத்தில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. காவல்துறையை பார்த்து குற்றவாளிகளும், ரவுடிகளும் பயப்படுவதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

பி.ஜேம்ஸ் லிசா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.