விழுப்புரம் அருகே எக்கியர்குப்பத்தில் விஷசாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்த வழக்கில், ஆவணங்களை கோட்டக்குப்பம் டிஎஸ்பி சுனில், சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதியிடம் ஒப்படைத்தார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த எக்கியர்குப்பத்தில், கடந்த 13-ம் தேதி விஷ விசாராயம் குடித்து 70-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 14 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த மரக்காணம் காவல்துறையினர் ஐந்து தனிப்படைகள் அமைத்து 11 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில் கடந்த 15-ம் தேதி விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவிட்டார். இந்த வழக்கினை விசாரிக்க சிபிசிஐடி டிஐஜி ஜோஷி நிர்மல் குமார் தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டது. அதன்படி, விழுப்புரம் மாவட்ட விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதியும், செங்கல்பட்டு விசாராணை அதிகாரியாக மகேஸ்வரியும் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் கோட்டக்குப்பம் டிஎஸ்பி சுனில், வழக்கு தொடர்பான ஆவணங்களை விழுப்புரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஏடிஎஸ்பி கோமதியிடம் ஒப்படைத்தார். இதனை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விஷ சாராய வழக்கு தொடர்பான ஆவணங்களை விழுப்புரம் நீதிமன்றத்தில் பெற்று கொண்டதாகவும், வழக்கு விசாரணையை தொடங்க உள்ளதாகவும் மனு தாக்கல் செய்துள்ளனர். சிபிசிஐடி காவல்துறையினர், கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்து, அதனை தொடர்ந்து இன்று விசாரணையை தொடங்கினர்.







