லஞ்சம் வாங்குவதில் தான் இந்த அரசு சூப்பராக செயல்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்ற அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, பொள்ளாச்சி செல்லும் வழியில் சூலூர் சுல்தான் பேட்டையில் தொண்டர்கள் சார்பில் வீரவேல் கொடுத்து வரவேற்றனர். பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, இந்தியாவில் சூப்பர் முதல் அமைச்சர் என மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார், லஞ்சம் வாங்குவதில் தான் அவர் சூப்பராக இருக்கிறார், இந்த ஆட்சியில் கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் ஆகியவற்றைத் துல்லியமாக திமுக செய்து வருகிறது.
அதிமுக அரசு கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்குத் தான் திமுக அரசு ரிப்பன் வெட்டி தொடங்கி வைக்கிறது. ஆனைமலை – நல்லாறு திட்டத்திற்காக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியும், தானும் கேரளா முதலமைச்சரிடம் பேசி குழு அமைத்தோம். ஆனால் தற்போது ஆட்சி மாற்றம் வந்ததால், அது கிடப்பில் போடப்பட்டு என்னவானது என்றே தெரியவில்லை எனக் குற்றம்சாட்டினார்.தமிழ்நாட்டில் போதைப் பொருள் தாரளமாகக் கிடைக்கிறது. சட்டம் ஒழுங்கு தமிழ்நாட்டில் சீர்கெட்டுக் கிடைக்கிறது, 36 மணி நேரத்தில் 15 கொலை நடைபெற்றதாகக் குற்றம் சாட்டினோம் ஆனால் ஒரு நாளில் 12 கொலை என டிஜிபி சொல்கிறார்.
34 சதவீதம் மின்கட்டணம் உயர்வு அதிகரித்துள்ளது. மூன்றில் ஒரு பாகம் மின்சார கட்டணம் உயர்ந்துள்ளது. அதேபோல், சொத்து வரி உயர்த்தி 2,000 கொடுக்க வேண்டிய இடத்தில் 5,000 ரூபாய் கொடுக்கவேண்டிய சூழ்நிலை உள்ளது. இன்னும் ஒரு சில மாதங்களில் பேருந்து கட்டணம் உயரும். திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட பொங்கல் தொகுப்பு யாராலும் மறக்க முடியாது என சாடிய எடப்பாடி பழனிசாமி, நாட்டு மக்களை ஏமாற்றி கொள்ளையடிக்கும் அரசாக திமுக அரசு உள்ளது என்றும், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிரம்மாண்டமான வெற்றியை பெறும் என்றும் அவர் கூறினார்.







