மும்பையை கலக்கிய பிரபல போதைப் பொருள் கடத்தல் மன்னன் சென்னையில் மும்பை தனிப்படை போலீசாரால் கைது செய்யபட்டார்.
மும்பையில் கடந்த 2020-ம் ஆண்டு ரூ.20 கோடி மதிப்புடைய 20 கிலோ போதைப் பொருளை கடத்தியது தொடர்பாக லலித் பாட்டில் மற்றும் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். ரூ.130 கோடி மதிப்புள்ள மெபெட்ரோன் என்ற போதை பொருளை, லலித் பாட்டில் பயோடெக் கம்பெனியில் தயாரித்தது அம்பலமானது.
சிறையில் இருந்து கொண்டே ஐபோன் மூலம், லலித் பாட்டில் போதை பொருள் சாம்ராஜ்யத்தை இயக்கியது விசாரணையில் தகவல் தெரிய வந்தது.
இந்நிலையில் கடந்த 2ம் தேதி மும்பை சிறையில் இருந்து சிசிச்சை பெற மருத்துவமனை வந்த போது லலித் பாட்டில் தப்பியோடினார். குஜராத், கர்நாடகா மாநிலங்களில் தலைமறைவாக இருந்த லலித் பாட்டில், சென்னைக்கு வந்து பதுங்கியிருந்த போது கைது செய்யப்பட்டார். லலித் பாட்டிலின் செல்போன் சிக்னலை வைத்து, மும்பை போலீஸ் சுற்றி வளைத்து பிடித்தது.
கைது செய்யப்பட்ட லலித் பாட்டில் “மியாவ்” மற்றும் “மிஸ்டர் கேட்” என்ற பெயர்களில் பல்வேறு நட்சத்திர பார்டிகளில் பரிமாறப்படும் போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்தார்.
லலித் பாட்டில் சென்னையில் பதுங்கி இருப்பதை அவரது செல்போன் சிக்னல் மூலம் போலீசார் கண்டறிந்தனர். இதனையடுத்து மும்பை தனிப்படை போலீசார் சென்னையில் லலித் பாட்டிலை சுற்றி வளைத்து பிடித்து மும்பைக்கு அழைத்துச் சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
குறிப்பாக மும்பையின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் மன்னனுக்கு சென்னையில் யார் அடைக்கலம் கொடுத்தார்கள்? தமிழகத்திலும் போதை பொருள் சப்ளை செய்துள்ளாரா? என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.







