சென்னையில் போதை பொருள் விற்பனை – 7 நாட்கள் சோதனையில் 109 பேர் அதிரடி கைது

7 நாட்கள் சிறப்பு சோதனையில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்தது தொடர்பாக 109 பேரை கைது செய்துள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ்…

7 நாட்கள் சிறப்பு சோதனையில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்தது தொடர்பாக 109 பேரை கைது செய்துள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக “புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை” மூலம் சிறப்பு சோதனைகளை சென்னை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அதில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, குட்கா மற்றும் மாவா புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 4ம் தேதி முதல் 10ம் தேதி வரை 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 108 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 109 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

இதில், 236.65 கிலோ குட்கா புகையிலை பாக்கெட்டுகள், 39.12 கிலோ மாவா மற்றும் மூலப்பொருட்கள், 1 செல்போன், 1 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்தனர். சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதால், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் உள்பட சட்டவிரோத பொருட்களை கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

-பவானி பால்பாண்டி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.