சென்னையில் இதுவரை கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகளின் 504 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் சென்னையில், தீவிரமாக கண்காணித்து குற்றச் செயல்கள் நடக்காமல் தடுக்கவும், குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கவும், பல்வேறு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், சென்னையில் “போதை பொருள் தடுப்புக்கான நடவடிக்கை” (Drive aginst Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
2021ம் ஆண்டு முதல் இதுவரை (2022) கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தல், பதுக்கி வைத்தல், விற்பனை செய்தல் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில், 1 கிலோ மற்றும் அதற்கு மேற்பட்ட கஞ்சா மற்றும் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளின் வங்கி கணக்கு விவரங்கள் சேகரித்து, அவற்றை சட்ட ரீதியாக முடக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், காவல் துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையாளர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் அடங்கிய காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, கடந்த 2 ஆண்டுகளில் இதுவரை கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கைப்பற்றிய வழக்குகளில் தொடர்புடைய 1,351 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 1,351 குற்றவாளிகளில் 908 குற்றவாளிகளின் சொத்து மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் சேகரித்து, உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி சட்டரீதியாக முடக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டு இதுவரை 470 குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
நேற்று ஒரு நாள் சிறப்பு தணிக்கை மூலம் இதர குற்றவாளிகளின் வங்கி கணக்குகளை முடக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டு. நேற்று ஒரே நாளில் 34 குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் மொத்தம் 504 குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. கஞ்சா மற்றும் போதை பொருட்களை கடத்தி வருபவர்கள் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்வதுடன், அவர்களின் வங்கி கணக்குகள் முடக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.







