புதுச்சேரி ஏரிகளில் படகு சவாரிக்காக நடந்து வரும் துார்வாரும் பணிகள்!

புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகம் படகு சவாரியை விரும்புவதால் நகரின் மத்தியிலுள்ள வேல்ராம்பட்டு, உழந்தை ஏரிகளில் மீண்டும் படகு சவாரிக்காக துார்வாரும் பணிகள் நடந்து வருகின்றது. புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு…

புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகம் படகு சவாரியை விரும்புவதால் நகரின் மத்தியிலுள்ள வேல்ராம்பட்டு, உழந்தை ஏரிகளில் மீண்டும் படகு சவாரிக்காக துார்வாரும் பணிகள் நடந்து வருகின்றது.
புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  சுற்றுலா பயணிகள் அதிகமாக படகு சவாரி மேற்கொள்ள அதிகம் விரும்புகின்றனர்.  மேலும் நோணாங்குப்பம் படகு குழாமில் வார இறுதியில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய குவிந்து வருகின்றனர்.  இந்நிலையில் வேல்ராம்பட்டு ஏரி, கனகன் ஏரிகளில் சுற்றுலாத்துறை சார்பில் படகுகள் விடப்பட்டது.
ஒரு சில மாதங்கள் மட்டும் நடந்த படகு சவாரி பின்னர் போதுமான தண்ணீர் இல்லாத காரணத்தால் நிறுத்தப்பட்டது.  இந்நிலையில் மீண்டும் ரூ.7 கோடியில் படகு சவாரி திட்டம்  தொடங்கவுள்ளது. இதில் முதற்கட்டமாக இரட்டை ஏரிகளான உழந்தை ஏரி, வேல்ராம்பட்டு ஏரியை இணைத்து 2 கி.மீ. நீளத்துக்கு வாய்க்கால் போன்று தோண்டப்படுகிறது.
இந்த வாய்க்கால் 20 மீட்டர் அகலமும், 1.50 மீட்டர் ஆழத்திலும் இருக்கும். இந்த பணிகள் அனைத்தையும் வருகிற ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்க விரைவாக பணிகள் நடந்து வருகின்றன. பணிகள் முடிந்ததும் படகுதளம் அமைத்து படகு சவாரி தொடங்கப்படும் என சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
—-அனகா காளமேகன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.