வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சூறை காற்றுடன் கன மழை பெய்தது.
மத்திய கிழக்கு அரபிக் கடலில் நிலவிய அதி தீவிர புயலான பிப்பர்ஜாய் மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
வேலூர் மாவட்டத்தில் அக்னி வெயில் முடிந்த பிறகும் சுமார் 105 டிகிரி வெயில் வாடி வந்தது. இந்த நிலையில் நேற்று சத்துவாச்சாரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வள்ளலார், கிரீன் சர்க்கிள், புதிய பேருந்து நிலையம், காட்பாடி, விருபாட்சிபுரம், பாகாயம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் இடியுடனும் கூடிய கன மழை பெய்தது.
சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் ஆங்காங்கே சாலை ஓரங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலக பூங்காவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களின் மீது மரங்கள் முறிந்து விழுந்தது.
மேலும் சாலைகளில் மழை நீர் தேங்கியதால். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு மிகுந்த அவதிக்கு ஆளாகினர். மேலும், இந்த கனமழையின் காரணமாக நகரின் பல்வேறு பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவி உள்ளதால் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
ம. ஶ்ரீ மரகதம்







