27 C
Chennai
December 6, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

திராவிட மாடலே இனி அனைத்து மாநிலங்களுக்குமான ஃபார்முலா – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டின் திராவிட மாடலே இனி அனைத்து மாநிலங்களுக்குமான ஆட்சி ஃபார்முலா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இரண்டாண்டு கால திமுக ஆட்சி தொடர்பாக, அக்கட்சியின் தொண்டர்களுக்கு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதில் அவர் கூறியிருப்பதாவது:

பத்தாண்டுகால இருண்ட ஆட்சியை விரட்டி, நாம் விடியல் தருவோம் என்ற நம்பிக்கையுடன் தமிழ்நாட்டு மக்கள் 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தனிப்பெரும்பான்மையுடன் வெற்றியை தந்து, ஆட்சி செய்வதற்கான அனுமதியை வழங்கினார்கள்.

ஜனநாயகத்தின் எஜமானர்களான மக்கள் அளித்த தீர்ப்பை மதித்து, அவர்களின் நம்பிக்கை வீண்போகாத வகையில், ஆட்சிப் பொறுப்பேற்ற 2021 மே 7-ஆம் நாள் முதல் ஒவ்வொரு திட்டத்தையும் மக்கள் நலனை மனதில் கொண்டு நிறைவேற்றி வருகிறது நமது திராவிட மாடல் அரசு.

மே 2-ஆம் நாள்கூட, ‘உங்களில் ஒருவன்’ காணொளியை வெளியிட்டு, அதில் திராவிட மாடல் அரசின் இரண்டாண்டு சாதனைகளையும், அரசியல் எதிரிகள் வைக்கின்ற ஆதாரமற்ற விமர்சனத்திற்கான பதில்களையும் அளித்து, கழக உடன்பிறப்புகள் ஆற்ற வேண்டிய பணிகள் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன்.

காலத்திற்கேற்ற அறிவியல் வளர்ச்சியும், புதிய தொழில்நுட்பமும் அடிக்கடி காணொளி வாயிலாக உங்களிடம் உரையாற்றச் செய்திருக்கிறது. அதேநேரத்தில், நமது திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்களைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் திசை திருப்பும் வகையில் திரிபு வேலைகளைச் செய்யக்கூடிய அரசியல் கட்சியினர், நம் மீது அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைத்தளங்களில் அடிப்படை ஆதாரமற்ற பல காணொளிகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான், உண்மையை உரக்கச் சொல்லவும், அரசியல் காழ்ப்புணர்வாளர்களின் வதந்திகளையும் அவதூறுகளையும் முறியடிக்கவும் நாமும் காணொளி வாயிலாகப் பதில் தர வேண்டியுள்ளது.

திமுக தொடங்கப்பட்ட நாளிலிருந்து காலம் காலமாக அதன் மீது அவதூறுகளைப் பரப்புவதையே வாடிக்கையாகக் கொண்டிருப்போர் இருக்கிறார்கள். திமுகவை திட்டியே வயிறு வளர்க்கக்கூடியவர்கள் இருக்கிறார்கள். கழகத்தை விமர்சித்தால்தான் தங்களுக்கு அடையாளமும் முகவரியும் கிடைக்கும் என்று அவதூறு பரப்புவோர் இருக்கிறார்கள்.

இன்று, நேற்றா இதைப் பார்க்கிறோம்?

என்று தான் இந்த வீண்பழிகளைக் கண்டு நாம் அஞ்சியிருக்கிறோம்?

திமுக தொடங்கப்பட்ட நாளிலிருந்து சுமத்தப்பட்ட அவதூறுகளுக்கு பேரறிஞர் அண்ணா தனது திராவிட நாடு இதழில் தம்பிக்கு எழுதிய கடிதங்களில் பதிலளித்தார். அவரது காலத்திற்குப் பிறகு பரப்பப்பட்ட அவதூறுகளுக்கும் வதந்திகளுக்கும் நம் உயிர்நிகர் தலைவர் முரசொலியில் உடன்பிறப்பு கடிதங்களில் பதிலளித்தார். கழகத்தின் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்வதற்கும், கழகத்தின் சாதனைகளை எடுத்துச் சொல்வதற்கும் கடிதங்கள்தான் பயன்பட்டன. கால வளர்ச்சியின் காரணமாக இன்று காணொளிகள் வெளியிடப்பட்டாலும், கடிதத்தின் வாயிலாக கழகத் தொண்டர்களாம் – கலைஞரின் உடன்பிறப்புகளாம் உங்களுடன் உரையாடும்போது நெருக்கமான அன்பும் பாசமும் வெளிப்படுவது இயற்கைதானே. தி.மு.கழகம் எனும் கொள்கைக் குடும்பத்தின் உடன்பிறப்புகளல்லவா நாம். அதனால்தான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

நம்மை நம்பி தமிழ்நாட்டை ஒப்படைத்த மக்களுக்கு நாம் செய்திருக்கும் பணிகளை, நிறைவேற்றியிருக்கும் திட்டங்களை, இரண்டாண்டு காலத்தில் நிகழ்த்திய சாதனைகளை அவர்களிடம் எடுத்துரைத்து அவர்களின் இதயத்தில் அவற்றைப் பதியச் செய்திடும் கடமை, உடன்பிறப்புகளாம் உங்களுக்கும், உங்களில் ஒருவனான எனக்கும் இருக்கிறது. அதனால்தான், திராவிட மாடல் அரசின் இரண்டாண்டு சாதனைகளை விளக்கி மே 7, 8, 9 ஆகிய மூன்று நாட்களில் 1,222 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடைபெறவிருக்கின்றன.

மே 7-ஆம் நாள் சென்னை பல்லாவரம் கன்டோண்மெண்ட் நகரில் நடைபெறும் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் உங்களில் ஒருவனான நான் உரையாற்றுகிறேன். என்னுடன் கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., பங்கேற்கிறார். கழகத்தின் பொதுச்செயலாளர் துரைமுருகன் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் நாகர்கோயில் கிழக்குப் பகுதியிலும், கழகத்தின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு சேலம் மேற்கு மாவட்டம் தாரமங்கலம் நகரத்திலும், கழகத் துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி தேனி மாவட்டம் பெரியகுளம் நகரத்திலும், க.பொன்முடி கடலூர் மாவட்டம் பண்ருட்டியிலும், ஆ.ராசா எம்.பி., நீலகிரி மாவட்டம் கோத்தகிரியிலும், அந்தியூர் ப.செல்வராஜ் எம்.பி., ஈரோடு தெற்கு மாவட்டம் கொடுமுடி வடக்கு ஒன்றியத்திலும், கவிஞர் கனிமொழி எம்.பி., தூத்துக்குடியிலும், இளைஞர் அணிச் செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியிலும் உரையற்ற இருக்கிறார்கள்.

அதே நாளில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் நூற்றுக்கணக்கான சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. அதுபோலவே மே 8, 9 ஆகிய நாட்களிலும் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் தொடர்கின்றன. இந்தச் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களில், யார் யார் எங்கு உரையாற்றுகிறார்கள் என்ற விவரங்கள் முரசொலியில் வெளியிடப்பட்டிருக்கிறது.

இளைஞரணிச் செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில், சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களில் இளைஞரணியினர் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தியிருப்பதுடன், இளைஞரணி சார்பில் இரண்டாண்டு சாதனை விளக்க தெருமுனைக் கூட்டங்கள் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார். இதுபோலவே ஒவ்வொரு அணியினரும் கழகத்தின் இரண்டாண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களில் தவறாமல் பங்கேற்று, திராவிட மாடல் அரசின் செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கை உங்களில் ஒருவனான எனக்கு நிறையவே இருக்கிறது.

மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து, புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடிக் கல்வி, காலைச் சிற்றுண்டித் திட்டம், நம்மைக் காக்கும் 48, புதிய முதலீடுகள், அதிகத் தொழிலகங்கள், நிறைய வேலைவாய்ப்புகள் என அனைத்து மக்களுக்குமான – அனைத்துப் பகுதிகளுக்குமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

எதிர்வரும் செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் முதல் குடும்பத்தலைவியருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்பட இருக்கிறது. இவை அனைத்தையும் மக்களின் இதயத்தில் பதிந்திடும் வகையில் எடுத்துரைக்க வேண்டியது சொற்பொழிவாளர்களின் கடமை.

திராவிட மாடல் அரசின் சமூகநலத் திட்டங்களை, மக்களை மேம்படுத்தும் திட்டங்களை, மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் பயணிக்கச் செய்யும் திட்டங்களை இலவசத் திட்டங்கள் என்றும், இலவசத் திட்டங்களால் சீரழிவு ஏற்பட்டுவிட்டதாகவும் இழிவாகப் பேசியவர்கள் இப்போது கர்நாடக சட்டமன்றத் தேர்தல் களத்தில் என்னென்ன வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறார்கள் என்பதிலிருந்து அவர்களின் இரட்டை வேடம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் திராவிட மாடலே இனி இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குமான ஆட்சி நிர்வாக ஃபார்முலா என்பது உறுதியாகியிருக்கிறது. இருளை விரட்டிய இரண்டாண்டுகால விடியல் ஆட்சியின் வெற்றி இது. ஐந்தாண்டு முழுமைக்கும் இந்த வெற்றி தொடரும். அடுத்தடுத்த தேர்தல் களங்களிலும் வெற்றி நீடிக்கும். திராவிட மாடல் அரசின் நல்லாட்சிக்கான நற்சான்றிதழைத் தமிழ்நாட்டு மக்கள் தொடர்ந்து வழங்கிடும் வகையில் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் வரலாறு படைக்கட்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy