இரட்டை இலை சின்னம் இருப்பதால் மட்டுமே வெற்றி பெற்று விட முடியாது – டிடிவி தினகரன்

இரட்டை இலை சின்னம் இருப்பதால் மட்டுமே வெற்றி பெற்று விட முடியாது. ஈரோட்டில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக திமுக கூட்டணி பணத்தை தண்ணீர் போல செலவழித்து வருவதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். …

இரட்டை இலை சின்னம் இருப்பதால் மட்டுமே வெற்றி பெற்று விட முடியாது. ஈரோட்டில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக திமுக கூட்டணி பணத்தை தண்ணீர் போல செலவழித்து வருவதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். 

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக  இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, வரும் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கிய நிலையில் நேற்றுடன்  நிறைவுபெற்றது.

அமமுக சார்பில் சிவபிரசாந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வேட்பு மனுவை தாக்கல்  செய்திருந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் குக்கர் சின்னம் ஒதுக்காததால், இடைத்தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது..

”பதிவு செய்த கட்சியான அமமுகவுக்கு இரண்டு பொதுத் தேர்தலில் குக்கர் சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. ஏற்கனவே பல சின்னங்களில் போட்டியிட்டோம். தேவையற்ற குழப்பம் வேண்டாம் என்பதால் விலகியுள்ளோம். எங்களின் நிர்வாகிகளுடன் அழைத்து பேசி தான் இந்த முடிவை எடுத்தேன்.

இரட்டை இலை சின்னம் இருப்பதால் மட்டுமே வெற்றி பெற்று விட முடியாது. திமுகவை வீழ்த்த வேண்டும் என களமிறங்கினோம். அமமுக தொண்டர்களுகு தெரியும், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று. திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் ஆதரவில்லை.

ஈரோடு மக்கள் புத்திசாலிகள். அவர்களுக்கு தெரியும் என்ன செய்ய வேண்டுமென்று
தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்காதது மட்டுமே போட்டியிடாததற்கு காரணம். வேறு எந்த காரணமும் இல்லை. அது தொடர்பாக யாரும் என்னிடம் பேசவும் இல்லை. பாஜக ஆதரவு கோரினால் அப்போது அது குறித்து பேசுகிறேன்.

ஈரோட்டில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்பதற்காக திமுக கூட்டணி பணத்தை தண்ணீர் போல செலவழித்து வருகிறது. அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். எடப்பாடி பழனிசாமி எது வேண்டுமானலும் கருதட்டும், தேர்தல் வெற்றி தான் சொல்லும்”  என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் அமமுக வேட்பாளர் ஈரோடு கிழக்கு தொகுதியில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில் இன்று அமமுக வேட்பாளர் சிவ பிரசாந்தின் வேட்பு மனு தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதன் பின்னர் சிவ பிரசாந்த் வேட்புமனுவை வாபஸ் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

யாழன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.