ஈரோடு இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னம் ஒதுக்காததால், போட்டியிடப்போவது இல்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, பிப்ரவரி 27-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கிய நிலையில் இன்றுடன் நிறைவுபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதிமுக சார்பில் தென்னரசு, அமமுக சார்பில் சிவபிரசாந்த் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் குக்கர் சின்னம் ஒதுக்காததால், இடைத்தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமமுகவிற்கு கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஒதுக்கப்பட்ட பிரஷர் குக்கர் சின்னத்தை, இந்த இடைத்தேர்தலுக்கு ஒதுக்க இயலாது என்று தேர்தல் ஆணையம் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வரவிருக்கும் சூழலில், வேறு சின்னத்தில் போட்டியிடுவது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ள டிடிவி தினகரன், வரும் தேர்தல்களில் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவோம் என்றும் கூறியுள்ளார்.
மேலும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.