“நீங்கள் ஏன் கேள்வி கேட்கிறீர்கள் என்று எங்களை கேட்கக்கூடாது” – பெ.சண்முகம்

அரசை ஏன் கேள்வி கேட்கிறீர்கள் என வைகோ எங்களைப் பார்த்து கேட்கக்கூடாது என்று பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “ஆளும் கட்சியுடன் கூட்டணியில் உள்ள இரண்டு கட்சிகளின் தலைவர்கள் தினமும், முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியைக் குறை சொல்வதிலேயே குறியாக இருக்கிறார்கள். அதுவும், அமைச்சரவையில் இருந்துகொண்டே ஆளும் கட்சியைக் குறை சொல்கிறார்கள். பொழுது விடிந்தால் போதும், ஆளும் கட்சியைக் குறை சொல்லாமல் அவர்கள் சாப்பிடுவதில்லை” என்று பேசினார்.

இதற்கு, “அது மதிமுகவின் அணுகுமுறையாக இருக்கலாம். நீங்கள் ஏன் கேள்வி கேட்கிறீர்கள் என்று எங்களைப் பார்த்துக் கேட்கக்கூடாது” என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பதிலளித்துள்ளார்.

வைகோ பேசியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், “அது மதிமுகவின் அரசியல் அணுகுமுறையாக இருக்கலாம். எங்களைப் பொறுத்தவரை, அவர்கள் மக்களுக்குச் சாதகமான திட்டங்களைத் தீட்டினால், நிறைவேற்றினால் வரவேற்போம். மக்களுக்கு எதிரானது என்றால் வெளிப்படையாகப் பளிச்சென்று எங்களது கருத்துகளைத் தெரிவிப்போம். இது கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு.

மதிமுக என்ன நிலைப்பாடு எடுக்கிறதோ, அதையே நாங்களும் எடுக்க வேண்டும் என்று நினைத்தால் அது அவருடைய தவறு. நாங்கள் எழுப்பும் பிரச்சினைகளில் எது சரி, எது தவறு என்று சுட்டிக்காட்டினால் விளக்கங்களை அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். நாங்கள் எழுப்பக்கூடிய பிரச்சினைகளைப் பற்றிக் கவலைப்படாமல், வைகோ போன்ற மூத்த அரசியல்வாதிகள் கேள்வி கேட்பது பொருத்தமல்ல. அது அவருடைய கட்சியின் அணுகுமுறை என்றால், அவர்கள் அவ்வாறு நடந்துகொள்ளட்டும். ‘நீங்கள் ஏன் கேள்வி கேட்கிறீர்கள்?’ என்று எங்களைப் பார்த்துக் கேள்வி கேட்கக்கூடாது” என்று பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.