தமிழகம் முழுவதும் சட்டம் – ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில், கடந்த நவம்பர் 9 மற்றும் 10 ஆகிய இரண்டு நாட்களில் காவல்துறை சார்பில் மாநிலம் தழுவிய அளவில் சிறப்பு அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
இந்த நடவடிக்கையின்போது, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தீவிரமாகச் சோதனை செய்யப்பட்டன. குற்றச் செயல்களைத் தடுப்பது, போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளைக் கண்டறிவது, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது உள்ளிட்ட நோக்கங்களுடன் இந்த 48 மணி நேர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ரௌடிகள் மற்றும் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக நடத்தப்பட்ட சோதனையில், மாநிலம் முழுவதும் 8,626 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டனர். இதில் 443 பேர் உடனடியாகக் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். மேலும், 796 தொடர் குற்றவாளிகள் மீது நன்னடத்தை நடவடிக்கை எடுக்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுக்கும் வகையில் நடத்தப்பட்ட சோதனையில், 1,624 போதைப்பொருள் தொடர்புடைய சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டனர். இதில் சட்டவிரோதமாகப் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 77 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட கடுமையான குற்ற வழக்குகளுடன் தொடர்புடைய, சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட முக்கியக் குற்றவாளிகள் உள்ளிட்ட 2,924 பேர் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டனர். இதன் மூலம் 163 புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன், 167 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட வாகனச் சோதனையில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 2,865 வழக்குகளும், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாக 1,243 வழக்குகளும், அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 998 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.
மேலும், பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் வணிக வளாகங்களில் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரோந்து மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இதன் அடிப்படையில், பொது இடங்களில் இடையூறு ஏற்படுத்தியதாக 1,859 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 195 பேர் கைது செய்யப்பட்டனர்.
குற்றச் சம்பவங்கள் தொடர்பான தகவல்களைச் சேகரிப்பதற்காகவும், நிலுவையில் உள்ள நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றுவதற்காகவும் சிறப்புக் குழுக்கள் மற்றும் உள்ளூர் காவல் நிலையங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டன. இதன் ஒரு பகுதியாக, 1,057 முக்கியக் குற்றவாளிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டனர். மேலும், நீண்டகாலமாக நிலுவையில் இருந்த 73 பிணையில் வெளிவர முடியாத கைது வாரண்டுகள் நிறைவேற்றப்பட்டன.
தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கைப் பேணவும், சமூக அமைதியை உறுதிப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் இதுபோன்ற தீவிரக் கண்காணிப்பு மற்றும் அதிரடி சோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.




