“மோடி அரசால் நாட்டின் வேலைவாய்ப்புச் சூழல் கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகிறது” – மாணிக்கம் தாகூர்!

விபரீத விளையாட்டுகளை விளையாடி நாட்டை சீரழிக்கும் மோடி–அமித் ஷா தலைமையிலான பாஜக அரசை மிகக் கடுமையாக கண்டிக்கிறேன் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “மோடி–அமித் ஷா தலைமையிலான பாஜக–ஆர்.எஸ்.எஸ் ஒன்றிய அரசின் படுதோல்வி அடைந்த பொருளாதாரக் கொள்கைகளாலும் தொலைநோக்கற்ற நிர்வாகத்தினாலும் நாட்டின் வேலைவாய்ப்புச் சூழல் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகக் கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.

நகர்ப்புறங்களில் படித்துவிட்டு வேலை தேடும் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் வேலையின்மை விகிதம் முந்தைய காலாண்டில் இருந்த 18.2 சதவீதத்திலிருந்து 18.9 சதவீதமாக உயர்ந்து, ஜனவரி–மார்ச் 2022 காலகட்டத்திற்குப் பிறகு 18 காலாண்டுகளில் இல்லாத அளவிற்குப் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. குறிப்பாக, நகர்ப்புற இளம்பெண்களின் வேலையின்மை விகிதம் முந்தைய ஆண்டின் ஜூலை–செப்டம்பர் காலாண்டில் 25.3 சதவீதமாக இருந்து தற்போது 26.1 சதவீதமாக அதிகரித்துள்ளது பாஜக–ஆர்.எஸ்.எஸ் அரசின் நிர்வாகச் சீர்கேட்டையும் பெண்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திறனின்மையையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மேலும், ஒட்டுமொத்த நகர்ப்புற வேலையின்மை விகிதமும் முந்தைய காலாண்டில் இருந்த 6.7 சதவீதத்திலிருந்து 6.8 சதவீதமாக உயர்ந்து ஓராண்டு கால உச்சத்தை எட்டியுள்ளது.

கிராமப்புறங்களில் முறையான புதிய ஊதிய வேலைவாய்ப்புகள் இல்லாத காரணத்தால் ஒட்டுமொத்தத் தொழிலாளர் அமைப்பிலும் பெரும் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் பணிபுரியும் பெண்களில் 72.8 சதவீதம் பேரும், ஆண்களில் 57.2 சதவீதம் பேரும் சுயதொழில் அல்லது ஊதியமில்லா குடும்பப் பணிகளையே சார்ந்து வாழ வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். மேலும் ஊரகப் பெண்களில் 74.5 சதவீதம் பேரும், ஆண்களில் 47.2 சதவீதம் பேரும் விவசாயத் துறையையே ஒரே வாழ்வாதாரமாக நம்பியிருக்கும் நிலைக்குப் பின்தள்ளப்பட்டிருப்பது, மோடி–அமித் ஷா ஆட்சியில் தொழில்துறை மற்றும் உற்பத்தித் துறை அடைந்துள்ள இமாலய வீழ்ச்சியை அப்பட்டமாக நிரூபிக்கிறது.

மாணவர்கள் மற்றும் படித்த இளைஞர்களின் எதிர்கால வளர்ச்சி குறித்தோ, நாட்டின் பெண்களின் பொருளாதார நலன் மற்றும் பாதுகாப்பு குறித்தோ சற்றும் கவலைப்படாமல் பாஜக–ஆர்.எஸ்.எஸ் அரசு ஆழ்ந்த கும்பகர்ண தூக்கத்தில் கிடக்கிறது. ஆண்டுதோறும் இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று பம்மாத்து காட்டி மோடி–அமித் ஷா அரசு, பத்தாண்டுகளுக்கு மேலாக நாட்டின் எதிர்காலத் தலைமுறையினரான மாணவர்களையும் பெண்களையும் நடுரோட்டில் தவிக்கவிட்டு வெறும் விளம்பர அரசியலில் மட்டுமே திளைத்து வருகிறது.

வெற்று விளம்பர மாயைகளையும் மக்களைத் திசைதிருப்பும் மலிவான அரசியலையும் நம்பி இனியும் ஏமாற நாட்டின் இளைஞர்களும் பெண்களும் தயாராக இல்லை; அவர்களின் எதிர்காலத்தோடு விபரீத விளையாட்டுகளை விளையாடி நாட்டை சீரழிக்கும் மோடி–அமித் ஷா தலைமையிலான ஒன்றிய பாஜக அரசை மிகக் கடுமையாக கண்டிக்கிறேன்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.