திமுக கூட்டணியில் இடம்பெறும் சூழல் இல்லை – மு. வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி…!

திமுக கூட்டணியில் சிபிஐ கட்சி இடம் பெறுவதற்கான சூழல் இல்லை என்று அக்கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலசெயலாளர் மு.வீரபாண்டியன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

அறிவியல் பூர்வமாக இந்தியாவை வழிநடத்திய நேருவை, பாஜகவினர் வசைபாடுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது. அதிக நாட்கள் பிரதமராக இருந்த இருந்த மோடியை வாழ்த்துகிறார்கள். ஆனால் நேருவை வசைபாடுகிறார்கள். பின் தங்கிய இந்தியாவை 5 ஆண்டு திட்டத்தின் மூலம் சிறப்பாக வழிநடத்தியவர் நேரு.

கரப்பான் பூச்சி இளைஞர்களின் கோரிக்கையை மத்திய அரசு செவி சாய்க்க வேண்டும். வருகின்ற சட்டமன்ற கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் துவங்க வேண்டும். கடந்த ஆட்சியின் போது ஆளுநர்களின் செயல்பாடுகள் போல இந்த முறை நடக்க கூடாது. சட்டமன்றத்தின் மாண்பை பாதுகாக்க வேண்டும்

நமக்கான நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தலில் அன்றைய சூழலுக்கு ஏற்றவாறு கூட்டணி தொடர்பான முடிவை எடுப்போம். கூட்டணி அமைப்பதற்கான சூழல் தற்போது தமிழகத்தில் இல்லை.

மக்களின் தீர்ப்புக்கு ஏற்றவாறு தவெகவிற்க்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்துள்ளோம். எங்களின் அரசியல் பகை என்றுமே பாஜக ,ஆர்.எஸ்.எஸ் உடன் தான். தற்போது உள்ள சூழலில் திமுக கூட்டணியில் சிபிஐ இடம் பெறும் சூழல் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.