உழவர்களின் கண்ணீர் முதலமைச்சருக்கு மகிழ்ச்சியாகத் தெரிகிறதா…? – அன்புமணி ராமதாஸ்….!

மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திமுகவின் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சி தான் வேளாண் துறை வரலாற்றில் மிக மோசமான ஆண்டுகள் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர்,

”திமுகவின் ஐந்தாண்டு ஆட்சியில் விளைநிலங்கள் செழித்து, அதற்குரிய பலன்களும் அதிகமாகியிருப்பதால் அவர்களின் நெஞ்சத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது; இயற்கை சீற்றங்கள் ஏற்பட்ட போதும் விவசாயிகளுக்கு திமுக அரசு துணையாகவும் அரணாகவும் நின்றது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். இதைப் பார்க்கும் போது பொய்மூட்டைகளை அவிழ்த்து விடுவதற்கும், நாடகங்களை நடத்துவதற்கும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு எல்லையே இல்லையா? என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

வேளாண் துறை வரலாற்றில் மிக மோசமான ஆண்டுகள் என்றால் அது மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான கடந்த ஐந்தாண்டு கால ஆட்சி தான். திமுக ஆட்சியில் வேளாண்மை வளரவில்லை. மாறாக வீழ்ச்சியடைந்து வருகிறது. 2023-24ஆம் ஆண்டின் வேளாண்துறை 3.22% (3.22%), 2024-25ஆம் ஆண்டில் மைனஸ் 1.83% (1.83%) வளர்ச்சி அடைந்திருப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அதாவது வேளாண்துறை உற்பத்தி மதிப்பு கடந்த இரு ஆண்டுகளாக குறைந்து வருகிறது.

இதனால் தமிழ்நாட்டில் ஒரு விவசாயியின் ஆண்டு வருமானம் ரூ.10,804 ஆகவும், மாத வருமானம் வெறும் ரூ.900 ஆகவும் குறைந்திருக்கிறது. திமுக ஆட்சியில் உழவர்களுக்கு தினமும் ரூ.30க்கும் குறைவாக மட்டுமே வருவாய் கிடைக்கும் நிலையில் அவர்கள் நெஞ்சத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது என்று முதலமைச்சரே கூறினால் அதை விடக் கொடுமையான நகைச்சுவையும், கேலிக்கூத்தும் இருக்க முடியாது.

திமுக ஆட்சியில் ஐந்தாண்டு காலத்தில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை வெறும் ரூ. 81 மட்டுமே உயர்த்தப்பட்டிருக்கிறது. இதை வைத்துக் கொண்டு விவசாயிகள் எவ்வாறு கண்ணியமான வாழ்க்கையை வாழ முடியும் என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் விளக்க வேண்டும். தமிழ்நாட்டில் விவசாயிகள் எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறார்கள் என்பதே முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தெரியாது எனும் போது அவரிடம் இதையெல்லாம் எதிர்பாக்க முடியாது.

அவ்வளவு ஏன்? காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெய்த மழையில் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலும், நவம்பர் மாதம் பெய்த மழையில் 3 லட்சம் ஏக்கர் பரப்பளவிலும் நெற்பயிர்கள் சேதமடைந்த நிலையில் அவற்றுக்கான இழப்பீடு இன்று வரை வழங்கப்படவில்லை. 2024-ஆம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களிலும், 2025-ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்திலும் பெய்த மழையில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குத் தான் ரூ.289.63 கோடி நிவாரணம் வழங்குவதற்கு அண்மையில் தான் தமிழக அரசு ஆனையிட்டது. அந்தத் தொகையும் உழவர்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டு விட்டதா? எனத் தெரியவில்லை.

உழவர்கள் வாழ்வாதாரம் இல்லாதவர்கள். பயிர்களின் சாகுபடி சிறப்பாக அமைந்தால் தான் அவர்கள் வயிற்றுப் பசியையாவது தீர்த்துக் கொள்ள முடியும். ஆனால், அந்த பயிர்களே மழையில் மூழ்கி வீணாகி விட்ட நிலையில் அதற்கான இழப்பீட்டை வழங்க ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டும் என்றால், அதற்கு உழவர்கள் என்ன சீமான்களா? உழவர்களின் கண்ணீர் முதலமைச்சருக்கு மகிழ்ச்சியாகத் தெரிகிறதா?

கற்பனையும் ஃபேண்டசியும் கலந்து எழுதிக் கொடுக்க ஆள் இருக்கிறார்கள் என்பதற்கான அத்தனையையும் முதலமைச்சர் சாதனையாக கூறுவது நியாயமல்ல. ஆட்சியில் உழவர்கள் நிலை திமுகவின் ஐந்தாண்டு எந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறது என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மனசாட்சியைத் தொட்டுப் பார்த்து விட்டு பேச வேண்டும். குறைந்தபட்சம் கடந்த ஆண்டில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான இழப்பீட்டை ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் என்ற அளவில் உழவர்களுக்கு வழங்கிவிட்டு முதலமைச்சர் பேச வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.