ஈரானில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக வன்முறை போராட்டங்கள் வெடித்துள்ளது. பல இடங்களில் தீ வைப்பு சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் மக்கள் பலர் கொல்லப்படுகிறார்கள், அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது.
இதன் காரணமாக போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வர ஈரானிய அரசாங்கத்தை டொனால்ட் டிரம்ப் மீண்டும் எச்சரித்து வருகிறார். மேலும் போராட்டக்காரர்கள் மீது ஈரான் அரசு தாக்குதல் நடத்தினால், அமெரிக்கா தலையிடும் என அதிபர் டிரம்ப் எச்சரித்திருந்தார்.
ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள், அமெரிக்காவிற்கு அனுப்பும் பொருட்களுக்கு 25% கூடுதல் வரி செலுத்த வேண்டியிருக்கும் என டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், ஈரான் இஸ்லாமிய குடியரசுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாடும் அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் 25% வரியை எதிர்கொள்ளும் என்றும், இந்த உத்தரவு இறுதியானது மற்றும் தீர்க்கமானது என்றும் கூறியுள்ளார்.
மேலும் இந்த வரி கொள்கையை எப்படி அல்லது எப்போது செயல்படுத்துவார் என்பதை டிரம்ப் குறிப்பிடவில்லை. இதன் காரணமாக இந்த உத்தரவு உலகின் பெரும்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







