ஆலோசனை கூட்டம் : தமிழ் நாடு காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு ராகுலின் முக்கிய அறிவுரை…? – செல்வபெருந்தகை பேட்டி….!

தமிழ் நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் பொதுவெளியில் கூட்டணி குறித்து பேசக் கூடாது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளதாக மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

தமிழ் நாட்டில் சட்டமன்றத் தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை முடிக்கி விட்டுள்ளன. அந்த வகையில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி சார்பில் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.

இதனிடையே காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சிலர் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் ஆட்சியில் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற கோரிக்கையை முன்வைத்தனர். அதே போல காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகி விஜயின் தவெக கட்சியுடன் கூட்டனியில் சேர இருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டன.

இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர். டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான இந்திரா பவனில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற தலைவர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள்  பங்கேற்றனர்.

சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு உள்ள இடங்களை வழங்க திமுகவிற்கு அழுத்தம் தருவது, அமைச்சரவையில் இடம் பெறுவது, தவெகவுடன் கூட்டணி வைப்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் குறித்த ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆலோசனை கூட்டம் முடிவுற்றதை தொடர்ந்து தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பொதுவெளியில் கூட்டணி குறித்து பேசக் கூடாது, கூட்டணி குறித்து சமூக ஊடகங்களில் பதிவுகளை இடக்கூடாது என நிர்வாகிகளுக்கு தலைமை உத்தரவிட்டுள்ளதாகவும், தலைமை எடுக்கும் முடிவை மாநில காங்கிரஸ் கமிட்டி பின்பற்றும் என்றும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.