பெண் காவலரிடம் அத்துமீறிய திமுக நிர்வாகிகள் சஸ்பென்ட்- பொதுசெயலாளர் துரைமுருகன்

சென்னையில் திமுக பொதுக்கூட்டத்திற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திமுகவில் இருந்தும் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். சென்னை விருகம்பாக்கம் தசரதபுரம் பேருந்து…

சென்னையில் திமுக பொதுக்கூட்டத்திற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண்
காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திமுகவில் இருந்தும் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை விருகம்பாக்கம் தசரதபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் கடந்த 31ம்
தேதி பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு பணியில் இருந்த 22 வயதான பெண் காவலருக்கு அந்த கூட்டத்தில் இருந்த இரண்டு இளைஞர்கள் அத்துமீறி பாலியியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

ஒரு கட்டத்தில் எல்லை மீறவே பெண் காவலர் கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.
சத்தம் கேட்டு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஒருவரை பிடித்தனர். மற்றொருவர் தப்பி ஓடினார். அங்கிருந்த காவல் ஆய்வாளர் தாம்சன் சேவியர் விரட்டி சென்று பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில், சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த பிரவீன், சின்மயா நகரை சேர்ந்த ஏகாம்பரம், என்பது தெரிந்தது.

சென்னை தெற்கு மாவட்டம் கலைஞர் நகர் வடக்கு பகுதி, 129அ-வது வட்டத்தில் திமுகவில் பொறுப்பில் இருப்பதும் தெரிய வந்தது. இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்ல முயன்றபோது கட்சி நிர்வாகிகள் தடுத்து நிறுத்தி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.இதன் பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 2 பேரும் விடுவிக்கப்பட்டதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 பேர் மீது நடவடிக்கை எடுக்காமல் விடுவித்தது தொடர்பாக அதிமுக, பாஜக தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்தது.

இந்நிலையில் திமுக நிர்வாகிகளான பிரவீன், ஏகாம்பரம் ஆகியோர் கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டார்.

இதையடுத்து விருகம்பாக்கம் போலீசார் பிரவீன், ஏகாம்பரம் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவர்கள் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அநாகரீகமாக நடந்து கொண்டதாக பெண் காவலர் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்து அங்கிருந்த சிசிடிவி கேமிரா பதிவுகள் ஆய்வு செய்து சாட்சியங்கள் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு, விசாரணையின் முடிவில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.