தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டிருந்த எக்ஸ் பதிவில், மொழி ஒன்று – வரிவடிவம் மூன்று’ எனும் வகையில் இந்திப் பெயரையே தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் எழுதி வைக்கும் இந்தி திணிப்பு செயலில் பாஜக அரசு இறங்கியுள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் எப்போதெல்லாம் பொதுமக்கள் மத்தியில் ஆட்சிக்கு எதிரான கடும் எதிர்ப்பு எழுகிறதோ அப்போதெல்லம் திமுக இந்தி திணிப்பை எடுத்து காட்டுவதாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
”மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, எப்போதெல்லாம் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, நீதிமன்றங்களில் கொட்டு வாங்கி, செய்யும் ஊழல் எல்லாம் வெளிவந்து, பொதுமக்கள் மத்தியில் திமுகவுக்கு எதிரான கடும் எதிர்ப்பு எழுகிறதோ, அப்போதெல்லாம், அறிவாலயத்தில் உள்ள ஒரு பழைய தகரப் பெட்டியைத் திறந்து, இந்த இல்லாத இந்தித் திணிப்பை எடுத்துக் காட்டு என்று உங்கள் தந்தை சொல்லிவிட்டுச் சென்றாரா?
இந்த ஏமாற்று அரசியல் அவர் காலத்தோடு முடிந்து விட்டது. இனியும் இந்த புளித்துப் போன காமெடி செய்து கொண்டிருக்காமல், நீங்கள் ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து பெருகியிருக்கும் ஊழல், கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள், போதைப் பொருள்கள் புழக்கம், என, உண்மையான மக்கள் பிரச்சினைகள் குறித்து எப்போது பேசப் போகிறீர்கள்? “
என்று கேள்வி எழுப்பியுள்ளார்.







