திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் இன்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆஜராகவுள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திடீர் பயணமாக நேற்று காலை 7 மணிக்கு
விமானம் மூலம் டெல்லி சென்றார். அங்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்து பேசினார்.
இதனைத் தொடர்ந்து டெல்லியிலிருந்து நேற்று மாலை அண்ணாமலை சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாது அணை கட்டுவோம் என்று அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்து உள்ளதற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை என கூறினார்.
பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பாஜகவினர் கருப்பு சட்டை அணிந்தும், கருப்பு பலூன்களை பறக்கவிடுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தம்மீது தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில் இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.







