மாவீரன் திரைப்படம் இன்று வெளியான நிலையில் சென்னை ரோகிணி திரையரங்கிற்கு சென்ற நடிகர் சிவகார்த்திகேயனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள மாவீரன் திரைப்படம் இன்று காலை 9 மணிக்கு வெளியானது. தமிழ்நாட்டில் மொத்தம் 700 திரையரங்கில் மாவீரன் திரைப்படம் வெளியாகியுள்ளது. அதிதி சங்கர், இயக்குநர் மிஷ்கின், யோகி பாபு, சரிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் காலை 7.45 மணிக்கு சிவகார்த்திகேயன் ரோகிணி திரையரங்கிற்குச் சென்றார். ஏற்கனவே மேளதாளங்களுடன் ஆட்டம் பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ரசிகர்கள் சிவகார்த்திகேயனை கண்டதும் உற்சாகம் அடைந்தனர். சிலம்பம் சுற்றியும், ஆரவாரம் எழுப்பியும் அவரை வரவேற்ற ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர். தெலுங்கில் இந்தப் படம் ‘மாவீருடு’ என்ற பெயரில் வெளியாகிறது.





