சென்னை மடிப்பாக்கத்தில் திமுக வட்ட செயலாளர் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தில் குற்றவாளிகளைப் பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை மடிப்பாக்கம் 188வது வட்ட திமுக செயலாளரான செல்வம் என்பவருக்கு மாநகராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு, திமுக சார்பில் சீட் வழங்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் நேற்றிரவு 8 மணியளவில் மடிப்பாக்கம் ராஜாஜி நகரில் உள்ள அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள், ஆதரவாளர்களுடன் செல்வம் பேசி கொண்டு இருந்தார். செல்போன் அழைப்பு வந்ததால், வெளியே வந்து நின்று பேசிக்கொண்டிருந்துள்ளார்.
அப்போது, இருசக்கர வாகனங்களில் வந்த 8 பேர் கொண்ட மர்ம கும்பல், திடீரென செல்வத்தை சராமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். தடுக்க முயன்ற செல்வத்தின் நண்பருக்கு வெட்டுக்காயம் விழுந்தது. ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய செல்வத்தை கட்சி நிர்வாகிகள் மீட்டு, அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த திமுக எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ், மற்றும் ஏராளமான திமுக நிர்வாகிகள் அங்கு திரண்டனர். அந்த பகுதியில் பதற்றம் உருவானதால், மடிப்பாக்கம் பகுதியில் கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக, வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகளை அமைத்துள்ளனர். சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ள போலீசார், கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







