திமுக தலைவர் மு.கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது சென்னை சங்கமம் திருவிழா நடத்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் தன் பக்கம் திரும்ப வைத்த அவரது மகள் கனிமொழி தற்போது தூத்துக்குடியில் அதேபோன்று நெய்தல் என்ற பெயரில் கலைவிழா நடத்த முடிவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள விழாவில், கலையும், இலக்கியமும் நம்முடைய வாழ்க்கையில் முக்கியமான ஒரு அங்கமாகவே எப்போதும் இருந்துள்ளது. நம்முடைய மக்களுடைய வாழ்க்கையில் இருக்க கூடிய அழகான விஷயங்களை எடுத்துச் சொல்லக்கூடிய மண்சார்ந்த கலைகள், அந்த நிகழ்வுகளை வரும் ஜூலை 7ம் தேதி முதல் 10ஆம் தேதி தூத்துக்குடியில் நெய்தல் திருவிழாவாக கொண்டாட உள்ளோம். இதில் 300க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்விழாவோடு சேர்ந்து உணவுத்திருவிழாவும் நடைபெறவுள்ளது.இதற்கு நெய்தல் கலைத்திருவிழா என பெயரிட்டுள்ளோம் எனக்கூறியுள்ளார்.
திமுக தலைவர் மு.கருணாநிதி மறைவிற்கு பின்னர் நீண்டநாட்கள் அமைதியாக இருக்கும் கனிமொழி திடீரென களத்தில் குதித்திருப்பது ஏன் ? என அவரது ஆதரவாளர்களிடம் வினவியபோது, திமுக ஆட்சிக்கு வந்தவுடனே சென்னை சங்கமம் போன்று தமிழகம் முழுவதும் கலைத்திருவிழா நடத்த வேண்டும் என்பது கனிமொழியின் கனவாக இருந்தது.
ஆனால் அதுபோன்ற கலைத் திருவிழாவினை தமிழ்நாடு அரசே மேற்கொள்ளும் என அறிவிப்பு வெளியானது. இதனால் சற்று வருத்தமடைந்த கனிமொழி, நாம் நடத்தாவிட்டால் என்ன நம்ம அரசுதானே நடத்துகிறது என மெளனம் காத்தார். ஆனால் அறிவிப்பு வெளியானதே ஓழிய அதற்குரிய முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில்தான் தமது தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தானே களத்தில் இறங்கிவிட்டார் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
தேவைப்பட்டால் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அனுமதி பெற்று தூத்துக்குடி நெய்தல் திருவிழா போல் சென்னையில் நடத்த அவர் முயற்சிப்பார் என கனிமொழிக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.
கனிமொழியை பொறுத்தவரை தூத்துக்குடியில் மீண்டும் தொடங்கும் அவரது கலைப்பயணம் தமிழகம் முழுவதும் எடுத்துச் செல்லவேண்டும் என்பதே ஆகும். அதற்கேற்றாற்போல் அடுத்த கட்ட நடவடிக்கைகள் அமையும் என அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.
இராமானுஜம்.கி








